“அயோத்தியில் ராமர் சிலையை நிறுவுவதில் மகிழ்ச்சி” - எதிர்த்து வழக்கு தொடுத்த இக்பால் அன்சாரி கருத்து

By செய்திப்பிரிவு

அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் கோயிலில் பகவான் ராமரின் சிலை நிறுவப்பட உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக, ராமர் கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரி கருத்து தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வரும் 22-ம் தேதி திறப்பு விழா காண உள்ளது. அன்றைய தினம், மூலவரான குழந்தை ராமரின் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்ட தலைவர்கள் இவ்விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரிக்கு, ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்குமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளார். இதற்கான அழைப்பிதழை, ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள், இக்பால் அன்சாரியை நேரில் சந்தித்து வழங்கினர்.

அழைப்பிதழை பெற்றுக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய இக்பால் அன்சாரி, "பகவான் ராமரின் சிலை நிறுவப்படுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்து - முஸ்லிம் - சீக்கிய - கிறிஸ்தவ மதத்தவர்கள் இணக்கமாக வாழும் இடம் அயோத்தி. இந்த இணக்கம் எப்போதும் இருக்கும். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மதிப்பளித்தார்கள். நாட்டின் எந்த பகுதியிலும் போராட்டங்களோ, ஊர்வலங்களோ நடைபெறவில்லை. தற்போது அயோத்தி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE