மாநிலங்களவை எம்.பி வேட்பாளராக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவாலை பரிந்துரைத்தது ஆம் ஆத்மி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜனவரி 19-ம் தேதி நடக்க இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவாலை வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சி பரிந்துரைத்துள்ளது. இவரைத் தவிர, டெல்லி மதுபான ஊழல் தொடர்பாக சிறையில் இருக்கும் சஞ்சய் சிங் மற்றும் என்.டி.குப்தா ஆகியோரையும் இரண்டாவது முறையாக வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சி தெரிவு செய்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் நடந்த அக்கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டத்துக்கு பின்னர் ஸ்வாதி மாலிவாலின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களை முடிவு செய்வதற்காக கூடியது.

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சஞ்சய் சிங் மற்றும் என்.டி.குப்தா ஆகியோர் இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர்களாக தொடர்வதற்கு, கட்சியின் அரசியல் விவகாரக் குழு முடிவெடுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

இளம் வயதிலேயே சமூக செயல்பாட்டாளராக வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்வாதி மாலிவால், சமூக பிரச்சினைகள் மற்றும் மகளிர் உரிமைக்களுகான வழக்கறிஞராக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை வலியுறுத்தும், பாலின சமத்துவத்தை முன்னிறுத்தும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளும் அமைப்புகளுடன் அவர் தொடர்பில் உள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ஸ்வாதி மாலிவால், டெல்லியில் ஆசிட் தாக்குதல், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் பெண்கள் பாதுகாப்புக்காகவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE