கடந்த 2019-ம் ஆண்டில் இந்தியாவில் புற்றுநோய்க்கு 9.3 லட்சம் பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘தி லான்செட் பிராந்திய சுகாதாரம் - தென்கிழக்கு ஆசியா’ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2019-ம் ஆண்டில் பொது சுகாதாரத்தில் முக்கிய அச்சுறுத்தலாக புற்றுநோய் உருவெடுத்துள்ளது. கடந்த 2019-ல் ஆசியாவில் புதிதாக 94 லட்சம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. 56 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். இதில் 48 லட்சம் புதிய நோயாளிகள் மற்றும் 27லட்சம் மரணங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து 12 லட்சம் புதிய நோயாளிகள் மற்றும் 9.3 லட்சம் மரணங்களுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

சீனா, இந்தியாவை தொடர்ந்து, ஜப்பான் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ஜப்பானில் கடந்த 2019-ல் புதிதாக 9 லட்சம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. சுமார் 4.4 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர்.

2019-ல் ஆசியாவில் அதிகம் காணப்படும் புற்றுநோய்களில் மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. சுமார் 13 லட்சம் பேருக்கு இந்த வகை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. சுமார் 12 லட்சம் பேர் இந்த புற்றுநோயால் இறந்துள்ளனர்.

தவிர மார்பக புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. புற்றுநோய்க்கான 34 ஆபத்து காரணிகளில் புகைபிடித்தல், மது அருந்துதல், சுற்றுப்புற காற்று மாசுபாடு ஆகியவை ஆதிக்கம் செலுத்துகின்றன. இவ்வாறு அந்த ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE