லாரி ஓட்டுநர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் ஹைதராபாத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: குதிரையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்

By என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: டேங்கர் லாரி ஓட்டுநர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால், ஹைதராபாத்தில் தீவிர பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், குதிரை மீது சவாரி செய்தபடி ஒரு இளைஞர் உணவு டெலிவரி செய்தார்.

சாலை விபத்துக்கு காரணமாகும் லாரிகள், டேங்கர் லாரிகளின் ஓட்டுநர்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல், அங்கிருந்து தப்பி சென்று விட்டால், அவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனையும், ரூ. 7 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குற்றவியல் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் ஹைதராபாத்தில் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு செவ்வாய்க்கிழமை இரவு சுமுக தீர்வு கண்டது.

இந்நிலையில், தனது பைக்குக்கு பெட்ரோல் கிடைக்காத ‘ஸோமோட்டோ’ நிறுவன உணவு டெலிவரி செய்யும் இளைஞர், குதிரை மீது சவாரி செய்தபடி கடந்த 2 நாட்களாக உணவுகளை விநியோகித்து வருகிறார்.ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்கூடா பகுதியில் இவரை பார்த்த பொதுமக்கள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது தற்போது வைரல் ஆகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE