கேரளாவின் எல்டிஎஃப், யுடிஎஃப் கூட்டணிகள் ‘பெண் சக்தி’யை பலவீனமாக கருதுகின்றன: பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

திரிச்சூர்: கேரளாவின் எல்டிஎஃப் கூட்டணியும், யுடிஎஃப் கூட்டணியும் பெண் சக்தியை பலவீனம் என கருதுகின்றன என்று திருச்சூரில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

பாஜக மகளிர் அணி சார்பில் கேரளாவின் திரிச்சூரில் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நரேந்திர மோடி, சுதந்திரத்துக்குப் பிறகு கேரளாவை மாறி மாறி ஆட்சி செய்து வரும் மார்க்ஸிஸ்ட் தலைமையில் உள்ள இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் பெண் சக்தியை பலவீனம் என கருதின. சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டு வழங்குவதற்கான சட்டம் நீண்ட காலமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் இருந்தது. ஆனால், உங்கள் உரிமை உங்களுக்கு வழங்கப்படும் என நான் வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்றி உள்ளேன்.

முத்தலாக் காரணமாக இஸ்லாமிய சகோதரிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தார்கள். மத்தியில் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியில் இருந்தது. ஆனாலும், முஸ்லிம் சகோதரிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. முத்தலாக்கில் இருந்து அவர்களுக்கு விடுதலை கொடுப்பேன் என நான் வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்றி உள்ளேன்.

மாநாட்டில் பங்கேற்ற பெண்களில் ஒரு பகுதியினர்

எனக்கு ஆசிர்வாதம் வழங்க இந்த மாநாட்டுக்கு மிகப் பெரிய எண்ணிக்கையில் பெண்கள் வந்திருக்கிறீர்கள். நான் காசி நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவன். அங்கே காசி விஸ்வநாதர் இருக்கிறார். இங்கே, வடக்குன்னாதன் கோயிலில் சிவன் இருக்கிறார். கேரளாவின் கலாச்சார நகரான திரிச்சூரில் புதிய சக்தி வெளிப்பட்டுள்ளது. இந்த சக்தி ஒட்டுமொத்த கேரளாவிலும் எதிரொலிக்கும்.

சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார், நாட்டின் மிகச் சிறந்த ஆசிரியையும் சமூக சீர்திருத்தவாதியுமான சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் பிறந்த நாள் இன்று. இவ்விருவரும் பெண் சக்தி எத்தகைய ஆற்றல் கொண்டது என்பதை நமக்கு கற்பித்திருக்கிறார்கள். நாட்டின் சுதந்திரத்துக்கும், கலாச்சாரத்துக்கும், அரசியல் சாசனத்துக்கும் கேரளாவின் மகள்கள் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். குட்டிமாலு அம்மா, அக்கம்மா செரியன், ரோசம்மா புன்னூஸ் போன்றவர்கள் மிக துணிச்சலாக நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

முன்னதாக, நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு திரிச்சூரில் மிக பிரம்மாண்ட ரோட் ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அலங்கரிக்கப்பட்ட திறந்த ஜீப்பில் நரேந்திர மோடி சாலையின் இரு புறங்களிலும் குழுமிஇருந்த மக்களைப் பார்த்து கைகளை அசைத்தவாறு வருகை தந்தார். அப்போது பலரும் மோடி மீது மலர்களைத் தூவி அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE