சிஏஏ-வை அமல்படுத்த முயல்வது மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும்: மார்க்சிஸ்ட் கண்டனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முயல்வது மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு பல ஆண்டுகளாகிறது. இதுவரை சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் வகுக்கப்படவில்லை. ஆனால், தற்போது விதிகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலின்போது மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்பது தெளிவாகிவிட்டது. இது மக்களை கூர்மையாக பிளவுபடுத்தும்” என தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஒவைசி, “குடியுரிமை திருத்தச் சட்டம் சட்டவிரோதமானது. மதத்தின் அடிப்படையில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் உங்கள் குடியுரிமையை நிரூபிக்க நிபந்தனைகளை விதிக்கும் NPR-NRC உடன் இணைத்து, சிஏஏ-வை புரிந்து கொள்ள வேண்டும். சிஏஏ அமல்படுத்தப்படுமானால், அது இஸ்லாமியர்கள், தலித்துகள், ஏழைகளுக்கு மிகப் பெரிய அநீதியாக இருக்கும்.

சிஏஏ அமல்படுத்துவது குறித்த அறிவிப்பு கடந்த டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் வைத்து அறிவிக்கப்பட்டிருந்தால், அது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கும் என மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறி இருக்கிறார். டிசம்பர் 6 பாபர் மசூதி இடித்த தினம். அரசியல் சாசன பதவியில் இருந்து கொண்டு அவர் இவ்வாறு பேசி இருக்கிறார். இது மத ரீதியாக தூண்டக் கூடிய செயல் இல்லையா? இதனை அவர் ஏன் நீதிமன்றத்தில் கூறவில்லை” என கேள்வி எழுப்பி உள்ளார்.

பின்னணி: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமண மதத்தினர், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு பொருந்தும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு இயற்றியது. இந்த நாடுகளில் உள்ள இந்த மதத்தினர் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானால் அவர்களுக்கு விரைவாக இந்திய குடியுரிமை கொடுக்க இந்தச் சட்டம் வழி வகை செய்கிறது.

அதேவேளையில், இந்தச் சட்டத்தில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தின. இதன் காரணமாக இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்தச் சட்டத்துக்கான விதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE