ம.பி.யில் ஓட்டுநர்களின் ‘அந்தஸ்து’ பற்றி கேள்வி எழுப்பிய மாவட்ட ஆட்சியர்: வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியீடு

By செய்திப்பிரிவு

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் ஒருவர் லாரி ஓட்டுநர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது பொறுமையிழந்து ஓட்டுநர்களின் தகுதி பற்றி கேள்வி எழுப்பிய வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிராக வடமாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் சாஜாபூர் மாவட்ட ஆட்சியர் கிஷோர் கன்யால் போராட்டத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர்கள் சங்க பிரதிநிதிகளுடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோபமடைந்த ஆட்சியர் ஓட்டுநர்களின் தகுதி குறித்து கேள்வி எழுப்பினார். இதுகுறித்து வெளியான வீடியோவில், "ஒட்டுநர்களும் மற்றவர்களும் சட்டத்தை தங்களின் கைகளில் எடுக்கக் கூடாது என ஆட்சியர் கூறுகிறார். அதற்கு ஓட்டுநர் சங்க பிரதிநிதிகள் அவரை நியாயமாக பேசும்படி (talk nicely) கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து பொறுமையிழந்த மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட நபரைப் பார்த்து, "நீங்கள் என்ன செய்வீர்கள், உங்களின் அந்தஸ்து என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கூட்டத்தில் இருந்த ஒரு நபர், "எங்களுக்கு அந்தஸ்து இல்லை என்பதற்காகவே இந்த போராட்டதில் ஈடுபட்டுள்ளோம்" என்றார். உடனடியாக போலீஸார் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினர்.

இந்தச் சம்பவத்துக்கு பின்னர் தான் பேசியது குறித்து விளக்கமளித்து ஆட்சியர் கிஷோர் கன்யால் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “லாரி ஓட்டுநர்களின் போராட்டம் தொடர்ந்த நிலையில் அந்தக்கூட்டம் கூட்டப்பட்டது. சுமார் 250 லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் அங்கு கூடியிருந்தனர். ஜனநாயக ரீதியாக தங்களின் கோரிக்கைகளை எழுப்பும் படி அவர்களிடம் தெரிவிக்கவே அந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. அவர்களில் ஒருவர் மற்றவர்களைத் தூண்டி விட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தும் படி பேசினார். அந்தச்சூழ்நிலையில் நான் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். என்னுடைய வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்றாலும் சட்டத்தை யாரும் அவர்களின் கைகளில் எடுத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது” என்று கூறியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE