கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 602 பேருக்கு கரோனா உறுதி: 312 பேருக்கு ஜேஎன்.1 வகை தொற்று

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 602 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG) தரவுகளின்படி, நேற்றுவரை நாட்டில் மொத்தம் 312 பேருக்கு கரோனா ஜேஎன்.1 திரிபு வைரஸ் கண்டறியப்பட்டது, அவற்றில் 47 சதவீதம் கேரளாவில் பதிவாகியுள்ளன. அதாவது, அவை கேரளா (147 பேர்), கோவா (51 பேர்), குஜராத் (34 பேர்), மகாராஷ்டிரா (26 பேர்), தமிழ்நாடு (22 பேர்), டெல்லி (16 பேர்), கர்நாடகா (8 பேர்), ராஜஸ்தான் (5 பேர்), தெலங்கானா (2 பேர்), மற்றும் ஒடிசாவில் (ஒருவர்) என பாதிப்பு பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 602 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4, 440 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (ஜன., 03) தெரிவித்துள்ளது.

தற்போதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 5,33,371 ஆக உயர்ந்துள்ளது. 4,44,772,72 பேர் கரோனாவில் இருந்து மீண்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தியாவில் இதுவரை 220.67 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒரு இறப்பும், கேரளாவில் இரண்டு இறப்புகளும் பதிவாகியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. நேற்றுமுன் தினம் (ஜனவரி 1) புதிதாக 636 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் கேரளாவில் 2 பேரும், தமிழகத்தில் ஒருவரும் என மூவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE