அதானி vs ஹிண்டன்பர்க் விவகாரம்: உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு!

By செய்திப்பிரிவு

சென்னை: அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக சொல்லும் ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் புதன்கிழமை (இன்று, ஜன. 3) காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்க உள்ளது உச்ச நீதிமன்றம்.

கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருப்பதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்டது. பங்கு மதிப்பில் உயர்வைக் காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றது, பங்குச் சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டது, அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது. இதனால் பெரும் இழப்பை எதிர்கொண்டது அதானி குழுமம்.

இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், செபியின் விதிமுறைகள் குறித்தும், பங்குச் சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த சூழலில் இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE