புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வாபஸ்: லாரி ஓட்டுநர்கள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: திருத்தப்பட்ட புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை லாரி ஓட்டுநர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு லாரி ஓட்டுநர்கள் இதனை அறிவித்துள்ளனர்.

புதிய சட்ட திருத்தத்தின்படி சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.7 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டது. இதை எதிர்த்து வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள், தங்களது மூன்று நாள் போராட்டத்தை திங்கட்கிழமை (ஜனவரி 1) அன்று தொடங்கினர். தேசிய அளவில் இந்த போராட்டம் பேசு பொருளானது. இந்நிலையில், போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்று மத்திய அரசு பிரதிநிதிகளுடன் மோட்டார் வாகன சங்கங்களின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

தற்காலிமாக இந்த ஹிட் அண்ட் ரன் சட்ட திருத்தத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்தார். இதையடுத்து லாரி ஓட்டுநர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக, லாரி ஓட்டுநர்களின் போராட்டம் காரணமாக வட மாநிலங்களில் பரவலாக பல நகரங்களிலும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவும் அபாயம் இருந்தது. மக்களும் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலை நிரப்ப முனைப்பு காட்டினர். லாரி ஓட்டுநர்களின் போராட்டம் வாபஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தட்டுப்பாடு விலகும் சூழல் உருவாகி உள்ளது. இந்த சட்டத்தை அமல் செய்வது குறித்து மத்திய அரசு மற்றும் கனரக மோட்டார் வாகன சங்கங்களுக்கு இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை அடுத்த சில வாரங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE