காங்கிரஸில் இணைகிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் நிறுவனத் தலைவரும், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா வரும் ஜனவரி 4 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார். தன்னுடைய கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப் போகிறார் என்ற பேச்சுகள் அண்மையில் திடீரென எழுந்தன. இதையடுத்து, கடந்த நவம்பர் 3 ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. தேர்தலில் வாக்குகள் பிளவுபடுவதைத் தடுக்க காங்கிரஸுக்கு எனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளேன். கேசிஆர் மற்றும் அவரது கூட்டாளிகளின் பெரும் ஊழலால், ஒரு பணக்கார மாநிலம் இப்போது பெரும் கடனில் சுமையில் சிக்கியுள்ளது” என வெளிப்படையாக விமர்சித்திருந்தார். அதேபோல தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் தனது வெற்றியைப் பதிவு செய்தது.

இந்நிலையில், ஒய்எஸ்ஆர் கட்சியின் நிறுவனத் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா வரும் 4 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் தெலங்கானாவில் வரலாற்று வெற்றியைப் பெற்றது.

கேசிஆரின் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சிக்கு முடிவு கட்டியது. இந்நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இதில் கட்சியை இணைப்பது மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE