எக்ஸ்போசாட் அதிநவீன செயற்கைக் கோள் நிலைநிறுத்தம்: பிஎஸ்எல்வி-சி58 பயணம் வெற்றி

By செய்திப்பிரிவு

சென்னை: கருந்துளை, நியூட்ரான் விண்மீன்கள் தொடர்பான வானியல் ஆய்வுக்காக, எக்ஸ்போசாட் அதிநவீன செயற்கைக் கோள், பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது 2024-ம் ஆண்டின் சிறந்த தொடக்கம் என்று பிரதமர் மோடிபாராட்டு தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் புறஊதா கதிர்கள், எக்ஸ் கதிர்களின் இயக்கம் மற்றும் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோள்கடந்த 2015-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது. இது கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு அரிய தகவல்களை வழங்கி வருகிறது.

இதன் அடுத்த கட்டமாக, கருந்துளை, நியூட்ரான் விண்மீன்கள் போன்றவை குறித்து இன்னும் ஆழமாக புரிந்து கொள்வதற்காக எக்ஸ்போசாட் (X-ray Polarimeter Satellite - XPoSat) எனும் அதிநவீனசெயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட் மூலம் எக்ஸ்போசாட் செயற்கைக் கோள் நேற்று காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. 22 நிமிட பயணத்துக்கு பிறகு, பூமியில்இருந்து 650 கி.மீ உயரம் கொண்டகுறைந்த தாழ்வட்ட சுற்றுப்பாதையில் 6 டிகிரி சாய்ந்த நிலையில் எக்ஸ்போசாட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

எக்ஸ்போசாட் செயற்கைக் கோள் 469 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகள். இதில் எக்ஸ்பெக்ட் (எக்ஸ்ரேஸ்பெக்ட்ரோகிராபி), போலிக்ஸ் (எக்ஸ்ரே போலரி மீட்டர்) ஆகிய2 சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெங்களூருவில் உள்ளராமன் ஆராய்ச்சி நிறுவனமும், யு.ஆர்.ராவ் செயற்கைக் கோள்மையமும் இவற்றை உருவாக்கிஉள்ளன. விண்வெளியில் உள்ள கருந்துளைகளில் இருந்து வெளியேறும் எக்ஸ் கதிர்களின் துருவ முனைப்பு அளவு, கோணத்தை அளவிடுதல், நியூட்ரான் விண்மீன்களில் (இறந்த நட்சத்திரம்) இருந்து வெளியாகும் கதிரியக்கம், கருந்துளை வாயுக்களின் திரள் (நெபுலா), விண்மீன் வெடிப்பு (சூப்பர் நோவா) உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் நிலை குறித்து இந்த சாதனங்கள் ஆராயும்.

இதுதவிர, பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ்-4இயந்திரத்தில் ‘போயம்’ (PSLV Orbital Experimental Module - POEM) எனும் பரிசோதனை முயற்சியும் 3-வது முறையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதாவது, பிஎஸ்-4 இயந்திரத்தை இருமுறை நிறுத்தி மீண்டும் இயக்கி, அதன் உயரம் 350 கி.மீ.க்கு கீழே கொண்டுவரப்பட்டது. அந்த இயந்திரத்தில் இந்திய ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் தயாரித்த 10 ஆய்வு கருவிகள் இடம்பெற்றுள்ளன. இவை பூமியை வலம்வந்தபடி அடுத்த சில மாதங்களுக்கு பல ஆய்வுகளை மேற்கொள்ளும்.

பிஎஸ்-4 இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள 10 சாதனங்களில் வீசாட்எனும் கருவி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மகளிர் தொழில்நுட்ப கல்வி நிறுவன மாணவிகளால் வடிவமைக்கப்பட்டது. இது பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.

கருந்துளை பற்றிய ஆய்வுக்கு அமெரிக்கா - இத்தாலி கூட்டு முயற்சியில் ஐஎக்ஸ்பிஇ எனும் செயற்கைக் கோள் கடந்த 2021-ம் ஆண்டில் அனுப்பப்பட்டது. அதன்பிறகு 2-வது முறையாக, இந்தியாதான் இந்த ஆய்வில் களமிறங்கி உள்ளது. அமெரிக்காவின் ஐஎக்ஸ்பிஇ செயற்கைக் கோள் மதிப்பு ரூ.1,500 கோடி. இந்தியாவின்எக்ஸ்போசாட் மதிப்பு சுமார் ரூ.250 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ இதற்கு முன்னர் அனுப்பிய அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோள், எக்ஸ் கதிர்கள் எங்கிருந்துவருகின்றன என்பதை மட்டுமே ஆராயும். தற்போது அனுப்பப்பட்டுள்ள எக்ஸ்போசாட் செயற்கைக்கோள், கதிர்களின் நீண்டகாலசெயல்பாடுகளை புரிந்துகொள்ள ஏதுவாக அவற்றின் துருவ முனைப்பு உட்பட முழுமையாக அவற்றை ஆராயும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

பிரதமர் மோடி பாராட்டு: எக்ஸ்போசாட் செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக, இஸ்ரோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

‘இஸ்ரோவின் வெற்றி பயணம் 2024-ம் ஆண்டுக்கு ஒரு சிறந்த தொடக்கம். இந்தியாவை முன்னெப்போதும் இல்லாத உயரத்துக்கு கொண்டு செல்லும் விஞ்ஞானிகள் உட்பட ஒட்டுமொத்த இஸ்ரோ பணியாளர்களுக்கும் எனது வாழ்த்துகள்’ என்று அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE