இண்டியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் ராகுல்: கார்கேவுக்கு ‘செக்’ வைக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையா

By இரா.வினோத்


பெங்களூரு: இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்மொழியப்பட்டிருக்கும் நிலையில், ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை கூட்டணித் தலைவர்கள் பரிந்துரை செய்தனர். பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்ததில் எனக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லை” என தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்துள்ள கார்கே, “தேர்தலுக்குப் பிறகு பிரதமரை தேர்வு செய்யலாம்” என பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, “இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் ஆவார். அவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வர வேண்டும். மீண்டும் தொடங்கவிருக்கும் ‘பாரத் பாத யாத்திரை’ மூலம் ராகுல் காந்தி அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதியை உறுதி செய்வார்” என்று தெரிவித்தார்.

சித்தராமையாவின் இந்தப் பேச்சு கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கார்கேவின் ஆதரவாளரான சுரேஷ் குமார் கூறுகையில், “கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கார்கேவை பிரதமர் வேட்பாள‌ராக அறிவிப்பதில் சித்தராமையாவுக்கு விருப்பம் இல்லை என தெரியவந்துள்ளது. இவரை முதல்வராக்க பாடுபட்ட கார்கேவுக்கு சித்தராமையா துரோகம் செய்துள்ளார். கடந்த 2013-ல்கார்கேவை முதல்வர் ஆக்க காங்கிரஸ் மேலிடம் முயற்சித்தபோது, அப்போது முட்டுக்கட்டை போட்டவர் இதே சித்தராமையா தான்” என விமர்சித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE