“நான் அளிக்கும் வாக்குறுதி மீது மக்களுக்கு நம்பிக்கை” - பிரதமர் மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

அயோத்தி: அயோத்தியில் விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

டிசம்பர் 30-ம் தேதி மிகவும் முக்கியமான நாள். கடந்த 1943-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி சுதந்திர போராட்ட தலைவர் சுபாஷ் சந்திர போஸ், சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்து அந்தமானில் கொடியேற்றினார். அதே நாளில் அயோத்தியில் ரூ.15,700 கோடி மதிப்பில் 46 திட்டங்களை தொடங்கி, அடிக்கல் நாட்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

ரயில்வே துறையில் புதிய புரட்சியாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன. அடுத்த கட்டமாக அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கி உள்ளோம். தலைநகர் டெல்லியில் நமோ பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த 3 ரயில் சேவைகளும் ரயில்வே துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நாடு முழுவதும் 315 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

9 ஆண்டு கால ஆட்சியில்: முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது கடந்த 55 ஆண்டுகளில் 14 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டது. பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் 18 கோடிகுடும்பங்களுக்கு சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 10 கோடி குடும்பங்களுக்கு இலவசமாக இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

நான் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற இரவு, பகலாக கடினமாக உழைக்கிறேன். மக்களுக்காக எனது வாழ்நாளை அர்ப்பணித்து பணியாற்றுகிறேன். எனவே மோடியின் வாக்குறுதி மீது மக்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE