“நாட்டை இணைக்கவே கலாச்சாரங்கள்” - இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமம் நிறைவு

By செய்திப்பிரிவு

வாரணாசி: உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் கடந்த 14 நாட்களாக நடைபெற்று வந்த 2-வது காசி தமிழ் சங்கமம், பிரிவு உபசார நிகழ்ச்சிகளுடன் இன்று மாலை நிறைவடைந்தது.

மத்திய கல்வித்துறை இணை அமைச்சர்கள் டாக்டர் சுபாஷ் சர்க்கார், டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், உத்தரப் பிரதேச மாநில அமைச்சர்கள் தயா ஷங்கர் மிஸ்ரா, ரவீந்திர ஜேஸ்வால் ஆகியோர் பிரிவு உபசார நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ராம்கோ நிறுவனங்கள் தலைவர் வெங்கட்ராம ராஜா, வாரணாசி ஆட்சித் தலைவர் எஸ் ராஜலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

தமிழ் மொழிக்கும் காசிக்கும் இடையிலான பாரம்பரிய பண்பாட்டு பிணைப்புகளை அறிந்து கொள்ளும் வகையில், இரண்டாம் கட்ட தமிழ் சங்கமத்திற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏழு குழுக்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து பொதுமக்கள் தேர்வு செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு வாரணாசியில் காசி விசுவநாதர் ஆலயம், விசாலாட்சி ஆலயம், அன்னபூரணி ஆலயம், காலபைரவர் ஆலயம் ஆகியவற்றில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், கங்கை ஆற்றில் புனித நீராடுவதற்கும் அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாரணாசி நகருக்கு மிக அருகில் உள்ள சாரநாத் புத்த மத புனித தலத்திற்கும் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இரண்டு நாட்கள் காசியிலே ஒவ்வொரு குழுவும் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் அவர்கள் பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து தமிழகத்திற்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஏழாவது மற்றும் இறுதிக் குழுவான தொழில் முனைவோர் குழுவினர் இன்று காலை கங்கையிலே புனித நீராடினர்.

பின்னர் அவர்கள் தொழில் முனைவோருக்கான சிறப்பு கருத்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். பல்வேறு சிறு தொழில் முனைவோர் முத்ரா கடன் வசதி காரணமாக, தங்கள் தொழில் எவ்வாறு மேம்பட்டது என்று விவரித்தனர். கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் பங்கேற்றார்.

நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், காசி தமிழ் சங்கமம் இரண்டு கலாச்சாரங்களை இணைக்கும் ஒரு முயற்சி என்றும், இது நாடு முழுவதும் உள்ள கலாச்சாரங்களை இணைப்பதற்கான ஒரு முன்னோட்டம் என்றும் குறிப்பிட்டார்.

இந்த காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க, இந்த ஆண்டு 64 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் ஒரு குழுவிற்கு 200 வீதம் 1400 பேர் அழைத்துவரப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த இரண்டு வாரங்களில் புதிய அதிர்வலையை காசி நகரம் கண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கல்வித் துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், இரு மாநிலங்களின் கலாச்சாரத்தை ஒன்றிணைப்பதற்கு காரணம் வேற்றுமையில் ஒற்றுமை என்றும், இதனை நாம் எவ்வளவு உறுதியாக கடைப்பிடிக்கிறோம் என்பதை இந்த உலகிற்கு இதன் மூலம் உணர்த்துகிறோம் என்றும் கூறினார். பல கலாச்சாரங்கள் கொண்ட இந்தியா, இந்தக் கலாச்சாரங்களைக் கொண்டு நாட்டை பிரிக்காமல், அவற்றை இணைக்கவே பயன்படுத்துகிறது என்பதை இந்தச் சங்கமம் வெளிப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE