அயோத்தி | புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

அயோத்தி: அயோத்தியில் 240 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தையும், 1,450 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்தார்.

உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அயோத்தி ராமர் கோவில் நாட்டின் மிகப் பெரிய கலாச்சார மையமாகத் திகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் மற்றும் அதனைத் தொடர்ந்து அயோத்திக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதால், அங்கு ஏற்கனவே சிறிய அளவில் இருந்த ரயில் நிலையம் ரூ.240 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 3 மாடிகள் கொண்ட இந்த புதிய ரயில் நிலையத்தில், மின்தூக்கிகள், எஸ்கலேட்டர்கள், உணவகங்கள், உடைகளை மாற்றும் அறைகள், குழந்தைகளுக்கான கவனிப்பு அறைகள் காத்திருப்பு அறைகள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையம்

இந்த ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவில், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, ரயில்வே வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். அயோத்தியின் பெருமையை பறைசாற்றும் வண்ணம் அயோத்தி ரயில் நிலையத்தில் வண்ணங்கள், ஒவியங்கள் தீட்டப்பட்டிருப்பதை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது, ரயில் நிலையத்தின் சிறப்புகள் குறித்து யோகி ஆதித்யாநாத்தும், அஷ்வினி வைஷ்ணவும் பிரதமர் மோடிக்கு விளக்கினர்.

6 புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்: இதையடுத்து, அயோத்தி ரயில் நிலையத்தில் இருந்தவாறு இரண்டு புதிய அதிவேக அம்ரித் பாரத் ரயில்களையும், 6 புதிய வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கிவைத்தார். முன்னதாக, அயோத்தி ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அம்ரித் பாரத் ரயிலுக்குள் ஏறி, அதனை ஆய்வு செய்தார். மேலும், ரயிலில் இருந்த பள்ளி மாணவர்களோடு அவர் கலந்துரையாடினார்.

இதையடுத்து, அயோத்தியில் உள்ள மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெற்ற 10வது கோடி பயனாளியின் வீட்டுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அவர்களோடு கலந்துரையாடினார். மேலும், அவர்கள் வீட்டில் டீ அருந்தினார். இதையடுத்து, அயோத்தியில் உள்ள லதா மங்கேஷ்கர் சவுக்கிற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய வீணை முன் நின்றவாறு பொதுமக்களைப் பார்த்து கைகளை அசைத்தார். முன்னதாக, அயோத்திக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்கள். இதனையடுத்து, அங்கிருந்து அவர் அயோத்தி ரயில் நிலையத்துக்கு காரில் சென்றார். அப்போது வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு வந்து அவரை வரவேற்றனர். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலமும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. காரின் உள்ளே இருந்து கொண்டு கைகளை அசைத்தவாறு பயணித்த பிரதமர் மோடி, ஒரு கட்டத்தில் காரில் இருந்து கீழே இறங்கி அதன் படிகளில் நின்றுகொண்டு மக்களைப் பார்த்து கைகளை அசைத்து அவர்களின் வரவேற்பை ஏற்றார். பலர், அவர் மீது பூக்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE