வட இந்தியாவை வாட்டும் கடும் மூடுபனி: விமான, ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, மற்றும் உத்தரப் பிரதேச உள்ளிட்ட வடஇந்தியாவில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையப் பகுதிகளில் மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் நிலவுவதால் 80 விமான சேவைகள் தாமதமாகியுள்ளன. இதனால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

காலை 8.30 மணி வரை டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையப் பகுதிகளில் மோசமான வானிலை நிலவுவதால் சனிக்கிழமை 80 விமானங்கள் தாமதமாகியுள்ளன. டெல்லியில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பனிமூட்டம் காரணமாக பார்க்கும் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “பஞ்சாப், டெல்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் பிஹார் பகுதிகளில் ஜனவரி 2, 2024 வரை பனிமூட்டம் தொடரும். புத்தாண்டு முந்தைய இரவு வரை இந்தப் பகுதிகளில் பனிமூட்டம் மோசமாக இருக்கும்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்ப நிலை, 7 - 11 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. பிஹார், சத்தீஸ்கர், ஒடிசாவின் உள்ளடங்கிய பகுதிகள் மற்றும் ஜார்கண்ட் பகுதிகளில் 12 - 14 டிகிரி செல்சியஸ் வரையிலும் பதிவாகியுள்ளது. மத்திய இந்தியா பகுதிகளில் அடுத்த நான்கு ஐந்து நாட்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை மேம்படும், நாட்டின் மற்ற எந்தப் பகுதிகளில் மாற்றம் இருக்காது.

ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் பனிப்பொழிவும் லேசான மழைப்பொழிவும் இருக்கும். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளில் ஜன.2, 2024 வரை மழைப்பொழிவு இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE