புதுடெல்லி: உத்தரபிரதேசத்தின் காசி எனும் வாராணசி, இந்தியாவின் கலாச்சார தலைநகராக மாறி வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் தெரிவித்தார். காசி தமிழ்ச் சங்கமத்தில் முக்கிய நிர்வாகப் பணியாற்றும் தென்காசி மாவட்டத் தமிழரான இவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:
கடந்த ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியராக இருக்கும் நீங்கள் வாராணசியில் கண்ட முக்கிய மாற்றங்கள் என்ன?
பிரதமர் தொகுதி என்பதால் இந்நகரின் வளர்ச்சியில் அவரது அலுவலகம் நேரடி கவனம் செலுத்துகிறது. ஜி-20 மாநாடுகள் இந்தியாவிலேயே அதிகமாக வாராணசியில் 6 நடைபெற்றன. அடிப்படை கட்டமைப்புகளில் வாராணசி மிக அதிகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த ரூ.1,000 கோடியை உ.பி. அரசு ஒதுக்கியுள்ளது. இங்கு போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஏற்கெனவே உள்ள 2 கட்ட ரிங் ரோடுகளுடன் மூன்றாவதாகவும் ஒன்று, வாராணசியை தாண்டிச் செல்லும்வாகனங்களுக்காக வேகமாக அமைக்கப்படுகிறது. 2047-ல் முழுமையாக வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்றும் ‘குரோத் ஹப்’ திட்டத்தில் மும்பை,சூரத், விசாகப்பட்டினம் ஆகியவற்றுடன் டெல்லி என்சிஆர் போன்று வாராணசியும் மாற உள்ளது.
கங்கை நதியிலும் துவங்கிய பொதுவழிப் பயணம் பற்றி கூறுங்களேன்?
காசி விஸ்வநாதர் கோயில் காரிடார் கட்டிய பின், நதி மூலமாகவும் நகரில் நுழைய, 6 மிதக்கும் படகுத் துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ராம்நகரில் கொல்கத்தா வழியாக சரக்குகள் அனுப்ப ஒரு மினி துறைமுகம் செயல்படுகிறது.
வான்வழியாக நகரில் நுழையும் ரோப்வே கார் அமைகிறதாமே?
இந்தியாவிலேயே முதல் நகரமாக வாராணசியில் இத்திட்டம் ரூ.800 கோடியில் அமைகிறது. சோதனை ஓட்டம் மார்ச்சில் நடத்தி டிசம்பருக்குள் ரோப்வே காரின் பயணம் துவங்கிவிடும். ஒருமணி நேரத்திற்குள் சுமார் 3,000 பேர் பயணிக்கலாம். இதை, ராணுவப் பகுதி ரயில் நிலையத்திலிருந்து விஸ்வநாதர் கோயில் வரை அமைக்கிறோம். அடுத்து இதன் பயண தூரம் நீட்டிக்கப்படும். இதற்காக, அந்தரயில்நிலையத்தையும் ரூ.2,000 கோடியில் புனரமைக்கிறோம்.
வாராணசி வரும் பக்தர்களுக்கு தங்கும் இடம் பிரச்சினையாகி வருகிறதே?
இதை சமாளிக்க பல திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. கோயிலின் எதிர்புறம் கங்கை கரையில் நட்சத்திர விடுதிகளைபோல், 400 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பல குழுக்களாகதங்கலாம். சிறிய மாநாடுகள் நடத்தவும்வசதிகள் உள்ளன. இங்கு கங்கை ஆரத்தி உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இக்கூடாரங்கள் மழைக் காலத்தில் 4 மாதங்கள் அகற்றப்படும்.
கங்கையின் அனைத்து கரைகளிலும் ஆரத்தி நிகழ்ச்சிகள் துவங்கி விட்டனவே?
ஆரத்திகளும் கூடியதில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. இதனை பலஆண்டுகளாக தனியார்தான் நடத்துகின்றனர். இதை, மாநகராட்சி மூலமாக முறைப்படுத்தும் திட்டமும் உள்ளது.
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தமிழர்கள் உள்ளிட்ட பக்தர்கள் வருகை பல மடங்கு கூடியுள்ளதே..
பழைய கோயிலில் நாள் ஒன்றுக்கு சுமார் 20 ஆயிரமாக இருந்த பக்தர்கள், புதியதில் சுமார் 1.3 லட்சமாக கூடிவிட்டனர். இவர்களில், தமிழ்நாடு, ஆந்திராவிலிருந்து சுமார் 60 சதவீதம் பேர் வருகின்றனர். இவர்களுக்கு மொழிப் பிரச்சினை வராதபடிநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் கோரியதால், கோயில் வளாகத்தின் சிலைகளின் பெயர்களும் எழுதி வைக்கப்பட்டுள்ளன. கோயில் மீதான அனைத்து விவரங்கள் அறிய, கியூஆர்குறியீடும், சிறப்பு இணையதளமும் பிரபலப்படுத்தப்படுகிறது. அதேபோல், வாராணசி கோயில் உள்ளிட்ட அனைத்தும் பார்வையிட ஒரே நுழைவுச்சீட்டு முறையும் பிரதமர் யோசனையால் அறிமுகமாகி உள்ளது. முன்புபோல், நெரிசலின்றி வரிசையில் வசதியாக தரிசனம் செய்யவும், கோடையில் வெயிலில் இருந்து தப்பவும் ஜெர்மன் பந்தல் புதிதாகப் போடப்படுகிறது.
கடைசிக் காலத்தை காசியில் கழிக்க வருபவர்களுக்கான வசதிகள் என்ன?
இது தனிமனிதர்களுக்கான விருப்பம்.எனினும், விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் பொதுநல அமைப்பால் மும்மோட்சம் பவன் என்ற பெயரிலும் நகரிலும் பல விடுதிகளும் உள்ளன. நூற்றுக்கணக்கில் பக்தர்களுக்கான சத்திரங்களும் உண்டு.இவை அனைத்தின் மீதான குறைகள் உடனுக்குடன் விசாரித்து தீர்க்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி யோசனையால் துவக்கப்பட்ட காசி தமிழ்ச் சங்கமத்தின் நோக்கமும் பலன்களும் என்ன?
‘வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் நம் நாட்டில், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்பது அவரவர் கலாச்சாரங்கள் மாறாமல் ஒன்றிணைப்பதுதான். இதில் இரண்டு பழமையான வரலாறுகளை தொடர்புபடுத்தவே காசி தமிழ்ச் சங்கமம் துவங்கியது. இதன் அருகில் பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய புனித நகரங்களும் உள்ளன. பல நூற்றாண்டுகளாக இங்கு அறிவுசார்ந்த விவாதங்கள் நடைபெற்றன. இதனால்தான், கயாவிலில் ஞானம் பெற்ற புத்தர் இங்குள்ள சாரநாத் வந்து முதல் பிரசங்கம் நிகழ்த்தினார். சமண மதத்தின் 4 தீர்த்தங்கரர்களும், கபீர்தாஸ், ரவிதாஸ் என பல புனிதர்கள் பிறந்த இடமாக உள்ளதால் இந்த சங்கம யோசனை பிரதமருக்கு அவசியமாக இருந்தது. எனவே வாராணசியை முன்பு இருந்தது போல், நம் நாட்டின் கலாச்சாரத் தலைநகராக மாற்றுவது பிரதமரின் முக்கிய நோக்கம். இதன்மூலம், வாராணசி மட்டுமின்றி உ.பி. முழுவதிலும் தமிழர்கள் மீதானப் புரிதல் அதிகரித்து அவர்களது கலாச்சாரம் முக்கியத்துவம் பெற்று மரியாதையும் அதிகரித்துள்ளது. இதேபோல், தமக்காகவும் தமிழ்நாட்டில் சங்கமங்கள் நடத்துவதற்கான கோரிக்கை காசிவாசிகளிடம் எழுந்துள்ளது.
வாரணாசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டில்உ.பி. அரசு பங்களிப்பின் நிலை என்ன?
பாரதியின் வாராணசி வாழ்க்கையை டிஜிட்டல் மயமாக்க உ.பி. அரசு ரூ.4 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கான ஒப்புதலை அவரது குடும்பத்தினர் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
18 mins ago
இந்தியா
40 mins ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago