அசாம், மத்திய அரசுடன் உல்ஃபா ஒப்பந்தம்: வன்முறையை கைவிட ஒப்புதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அசாம் மற்றும் மத்திய அரசுடன் உல்ஃபா தீவிரவாத அமைப்பு நேற்று டெல்லியில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இறையாண்மை கொண்ட அசாமை உருவாக்கும் நோக்குடன் 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உல்ஃபா அமைப்பு தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டு வந்தது.இதையடுத்து மத்திய அரசால் 1990-ல் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் அரபிந்த ராஜ்கோவா தலைமையிலான உல்ஃபாபிரிவுக்கும் அரசுக்கும் இடையே கடந்த 12 ஆண்டுகளாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த பலனாக, அசாம் மற்றும் மத்திய அரசுடன் இந்த அமைப்பு நேற்று அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாசர்மா முன்னிலையில் இந்த முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. வன்முறையை கைவிடவும் தேசிய நீரோட்டத்தில் இணையவும் அந்த அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது. அசாமில் நீண்ட கால தீவிரவாதத்தை இந்த ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் அமித் ஷா கூறும்போது, “நீண்ட காலமாக, அசாம்உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் வன்முறையை எதிர்கொண்டன. 2014-ல் பிரதமர் மோடி பிரதமரான பிறகு, டெல்லிக்கும் வட கிழக்குக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE