“AI தொழில்நுட்பத்தால் பணியிழப்பு கவலை வேண்டாம்” - நிர்மலா சீதாராமன்

By செய்திப்பிரிவு

சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் பணியிழப்பு ஏற்படும் என்ற கவலை வேண்டாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை - மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“1980-களில் வங்கிகளில் கம்ப்யூட்டர் அறிமுகமானபோது ஊழியர்களுக்கு மாற்றாக கம்ப்யூட்டர் இருக்குமோ என்ற சந்தேகம் தொழிற்சங்கங்களுக்கு எழுந்தது. இப்போது நாடு எப்படி வளர்ச்சி கண்டுள்ளது என பாருங்கள். இன்று நமது இல்லங்கள் தொடங்கி அனைத்து இடங்களிலும் கம்ப்யூட்டர்கள் உள்ளன. அது வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உள்ளதா அல்லது பறித்து கொண்டதா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஏஐ தொழில்நுட்பத்தை யார் இயக்க உள்ளோம் என்பதை பாருங்கள். அதன் திறனை பயன்படுத்துவதற்கான கருவியை உருவாக்கப்போவதும் நீங்கள்தான். டிஜிட்டல் வளர்ச்சி பணிகளை யாரும் வழிமறிக்க முடியாது. அது பொருளாதாரத்துக்கு கேடு. வளர்ச்சி எனும் நீரோடையுடன் சென்றால் நமக்கும், நாட்டுக்கும் நல்லது.

டிஜிட்டல் பரிமாற்றத்திற்கான பல வழிகள் இன்று இந்தியாவில் உள்ளது. அதன் மூலம் எளிய முறையில் குறைந்த செலவில் பயணம் அனுப்பலாம். பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் வழிகளை அரசு கொள்கை ரீதியாகவும் ஊக்குவிக்கிறது” என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE