அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பை கார்கே, சோனியா ஏற்பார்களா? - காங்கிரஸ் பதில்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், மூத்த தலைவர் சோனியா காந்தியும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் செல்வது குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள அவர், "ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு மல்லிகார்ஜுன கார்கேவும், சோனியா காந்தியும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கும்பாபிஷேகத்துக்கு செல்வது குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்" என கூறினார்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக சமீபத்தில் பேட்டி அளித்த வெளிநாடுகளுக்கான காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரொடா, "எந்த ஒரு மதம் குறித்தும் எனக்கு கவலை இல்லை. நாட்டின் பிரதமர் எப்போதாவது கோயிலுக்குச் செல்வதாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், கோயில் விவகாரத்தை மிகப் பெரிய ஒன்றாக மாற்றுவது சரியா? இந்திய பிரதமர் கட்சியின் பிரதமர் அல்ல. அவர் அனைவருக்குமான பிரதமர். இந்தச் செய்தியை அவர் வழங்க வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

பிரதமர் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், அறிவியல் தொழில்நுட்ப சவால்கள் குறித்தெல்லாம் பேச வேண்டும். அப்போதுதான், உண்மையான பிரச்சினை என்ன என்பதை மக்கள் அறிவார்கள். ராமர் கோயிலா தற்போதைய உண்மையான பிரச்சினை? வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும் உண்மையான பிரச்சினை இல்லையா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

சாம் பிட்ரொடாவின் இந்தக் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெய்ராம் ரமேஷ், "இது அவரது சொந்தக் கருத்து. காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல. காங்கிரஸ் கட்சி சார்பாக அவர் இதை தெரிவிக்கவில்லை" என குறிப்பிட்டார்.

அதேநேரத்தில், சாம் பிட்ரொடாவின் கருத்துக்கு பாஜக கடும் எதிர்வினையாற்றி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற உள்ள பிராண பிரதிஷ்டை விழா காங்கிரஸ் கட்சிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என்பதால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு ராமர் மீதும், இந்துக்கள் மீதும் எப்போதும் ஒருவித வெறுப்பு உண்டு. சாம் பட்ரொடாவின் கருத்து அதைத்தான் எதிரொலிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

மற்றொரு பாஜக மூத்த தலைவரான சுசில் மோடி, "சாம் பிட்ரொடா போன்றவர்களுக்கு இந்தியாவுடன் உண்மையான தொடர்பு கிடையாது. அவர் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் குறித்தும் ராமர் கோயில் குறித்தும் பேசி இருக்கிறார். அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருக்கலாம். நமது நாட்டின் கலாச்சாரம் குறித்து அவருக்கு எந்தப் புரிதலும் இல்லை" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE