இந்து நம்பிக்கைக்கும் இந்துத்துவாவுக்கும் வித்தியாசம் உண்டு: கர்நாடக முதல்வர் சித்தராமையா

By செய்திப்பிரிவு

பெங்களூரு: இந்து நம்பிக்கைக்கும் இந்துத்துவாவுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "தேர்தலில் வெற்றி பெற மிதமான இந்துத்துவாவை கடைப்பிடிப்பது ஒரு வியூகமாக இருக்க வேண்டும்; இதன்மூலம், மிதமான இந்துத்துவ வாக்காளர்களின் வாக்குகளையும் பெற முடியும், சிறுபான்மையினரின் வாக்குகளையும் இழக்க நேரிடாது என்பதாக ஒரு கருத்து உள்ளது. என்னைப் பொறுத்தவரை இந்துத்துவா என்பது இந்துத்துவாதான். இந்துத்துவாவுக்கும் இந்து நம்பிக்கைக்கும் வித்தியாசம் இருக்கிறது.

நான் ஓர் இந்து. நாம் ராமரை வழிபடுவதில்லையா? பாஜகவினர் மட்டும்தான் ராமரை வழிபடுகிறார்களா? ராமர் கோயில்களை நாம் கட்டுவதில்லையா? ராம பஜனைகளை நாம் மேற்கொள்வதில்லையா? டிசம்பர் மாத இறுதி வாரத்தின்போது மக்கள் பஜனைப் பாடல்களைப் பாடுகிறார்கள். எங்கள் கிராமத்தில் நடைபெறும் இபோன்ற பஜனைகளில் சிறு வயதில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். மற்ற கிராமங்களிலும் கூட இந்த வழக்கம் இருக்கிறது. பாஜகவினர் மட்டும்தான் இந்துக்களா? நம் இல்லையா?" என குறிப்பிட்டார்.

முன்னதாக, கடந்த பிப்ரவரியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சித்தராமையா, "அரசியல் சாசனத்துக்கு எதிரானது இந்துத்துவா என கூறினார். இந்துத்துவா அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்துத்துவா வேறு; இந்து தர்மம் வேறு. நான் இந்து மதத்துக்கு எதிரானவன் அல்ல. நான் ஓர் இந்து. அதேநேரத்தில், நான் மனுவாதத்தை, இந்துத்துவத்தை எதிர்க்கிறேன். எந்த மதமும் கொலையை ஆதரிப்பதில்லை. ஆனால், இந்துத்துவா கொலையையும், பாகுபாட்டையும் ஆதரிக்கிறது" என தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதத்தின்போதும் இந்துத்துவத்தை தான் எதிர்ப்பதாக சித்தராமையா தெரிவித்திருந்தார். "நான் ஓர் இந்து. அதேநேரத்தில், இந்துத்துவத்தை நான் எதிர்க்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை நான் ஒருபோதும் எதிர்த்ததில்லை" என அவர் கூறி இருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE