காசி தமிழ் சங்கமம்-2 | நாவல், இலக்கியத்தை இந்தியில் மொழி பெயர்க்க வேண்டும்: எழுத்தாளர்கள் கலந்துரையாடலில் கருத்து

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் வாராணசியில் காசி தமிழ் சங்கமம் - 2 நடைபெறுகிறது. கங்கை நதியின் நமோ கரையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழர்கள் மற்றும் உத்தர பிரதேச மக்களின் சந்திப்புகள் நிகழ்கின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் 210 தமிழ் எழுத்தாளர்கள், உத்தர பிரதேச எழுத்தாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. ‘தமிழ் மற்றும் இந்தி மொழி இலக்கியத்தில் முற்போக்கான சிந்தனைகள்’ எனும் தலைப்பில் இரு மொழிகளின் எழுத்தாளர்களும் கலந்துரையாடினர்.

நீரஜா மாதவ், உதவி இயக்குநர்(ஓய்வு), அகில இந்திய வானொலி நிலையம் பேசும்போது, ‘அக்காலங்களில் அரசவைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்த திருநங்கைகள் பற்றிய கதைகள் எழுதப்பட்டன. இது தற்போது குறைந்துள்ளது. திருநங்கைகள் பற்றி அதிகமாக எழுதப்பட வேண்டும். காஷ்மீர் உட்பட நமது நாட்டின் எல்லை பிரச்சினைகள் பற்றி தேச சிந்தனைகளுடன் எழுத வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

உத்தர பிரதேச எழுத்தாளரான கவிந்தரஸ்ரீவாத்ஸவ் பேசும்போது, ‘வட இந்தியர், தென் இந்தியர் என யாரும் குறிப்பிடக் கூடாது. இதன்மூலம் பிரிவினை ஏற்படும். ஒற்றுமையை வளர்க்க, இந்தியாவின் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு பகுதியை சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடலாம். அனைத்து பகுதியை சேர்ந்த எழுத்தாளர்களும் ஒரே சிந்தனையுடன் ஒரே மாதிரியாக பயணிக்கிறோம்’ எனத் தெரிவித்தார்.

தமிழகத்தின் ஏற்காட்டை சேர்ந்த எழுத்தாளர் சதீஷ் ராஜ் கூறும்போது, ‘இந்திய எழுத்தாளர்கள் அந்த காலம் முதல் பெண்ணுரிமை, பெண் பாதுகாப்பு குறித்து அவரவர்மொழிகளில் எழுதி வருகிறார்கள். இதன் காரணமாக தற்போது பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இது, எழுத்தாளர்களுக்கு கிடைத்த வெற்றி. சட்டத்தை நிறைவேற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி’ எனத் தெரிவித்தார்.

கலந்துரையாடல் குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் மத்திய கல்வி அமைச்சகத்தின் செயலாளர் ஏ.எஸ்.ரிஜ்வீ கூறும்போது, தமிழின் நாவல்கள், இலக்கியங்கள் உள்ளிட்ட முக்கிய நூல்களை இந்தியில் மொழிபெயர்க்க வேண்டும். அதேபோல், இந்திநூல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். இதர பாரத மொழிகளுக்கு இடையிலும் இதுபோன்ற மொழிபெயர்ப்புகள் அவசியம். இப்பணியை உடனுக்குடன் செய்ய மத்திய அரசே முன்வர வேண்டும் என வலியுறுத்தி விரிவான அறிக்கை சமர்ப்பிப்பேன் என்று தெரிவித்தார்.

பாரதிய பாஷா சமிதியின் ஆலோசகர் சவுந்திரராஜன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். காசி தமிழ் சங்கமம்-2 கடைசி நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து இன்று வரும் வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE