நாட்டின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி போட்டியிடும்: மம்தா பானர்ஜி

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: நாட்டின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி போட்டியிடும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் நகரில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, "இண்டியா கூட்டணிக்கு திட்டம் இல்லை; தலைமை இல்லை; வியூகம் இல்லை. நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம். தேர்தலின்போது, பாஜக வெற்றி பெற்றால் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அக்கட்சி கூறியது. 2021ல் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றதில் இருந்து நமது அரசு அனைத்து ஏழைகளுக்கும் 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது.

மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதி வழிகளை மத்திய அரசு அடைத்துள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதியைக் கூட அவர்கள் விடுவிப்பதில்லை. ஆனாலும், மாநில அரசு அதனை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்ல, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் மேற்கு வங்க அரசு செயல்படுத்தி வருகிறது. தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றி இருக்கிறோம். மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கி இருக்கிறோம். மாணவிகள் 9ம் வகுப்பு பயிலும்போது அவர்களுக்கு சைக்கிள் கொடுக்கிறோம். 12ம் வகுப்பு படிக்கும்போது ஸ்மார்ட் போன் கொடுக்கிறோம்.

18 வயது வரை படிக்கும் ஏழை பெண்களுக்கு, அவர்களின் திருமணத்துக்கு முன் ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. அவர்கள் எந்த மதமாக இருந்தாலும், சாதியாக இருந்தாலும் இந்த தொகை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இன்று பெண்கள் கவலை இன்றி இருக்கிறார்கள். அவர்கள் நமது சமூகத்தின் பெருமை. பெண்களுக்கு அவர்கள் 12ம் வகுப்பு படிக்கும்போதும், கல்லூரியில் பயிலும் போதும் அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. அதேபோல், ஆதிவாசிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE