அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தியின் பெயர் - பின்னணி என்ன?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் பிரியங்கா காந்தியின் பெயர் முதல்முறையாக இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான சிசி தம்பி, பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமித் சதா ஆகியோருக்கு எதிரான வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், அவர்கள் குற்றவாளிகள் என அதில் குறிப்பிடப்படவில்லை.

கடந்த ஏப்ரல் 2006-ம் ஆண்டு ஹரியாணாவின் ஃபரிதாபாத் அருகில் உள்ள அமிபூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்துடன் பிரியங்கா காந்தி வீடு ஒன்றை வாங்கியதாகக் கூறப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரான ஹெச்.எல்.பாஹ்வா என்பவரிடம் இருந்து இந்த நிலம் வாங்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகள் கழித்து அந்த நிலம் மீண்டும் அவருக்கே விற்கப்பட்டுள்ளது. 2005-06-ம் ஆண்டுகளில், ராபர்ட் வதேரா இதே அமிபூர் கிராமத்தில் 40.8 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளார். இந்த நில ஒப்பந்தத்தை சிசி தம்பி நடத்திக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

சிசி தம்பியும், சுமித் சதாவும் தப்பியோடிய ஆயுத வியாபாரியான சஞ்சய் பண்டாரிக்கு உதவியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. 486 ஏக்கர் நிலம் விற்கப்பட்டதில் நடந்த மோசடி காரணமாக கைது செய்யப்பட்ட சிசி தம்பி, 2020-ல் ஜாமீனில் வெளியே வந்து வெளிநாட்டுக்கு தப்பியோடியதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், சிசி தம்பி, ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி ஆகியோருடன் பிரியங்கா காந்தி வதேரா மற்றும் ராபர்ட் வதேராவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதை அமலாக்கத் துறை தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுக்கு உள்ளான ராபர்ட் வதேரா, அதன் விசாரணையில் ஆஜராகினார் என்பதும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் அவர் திட்டவட்டமாக மறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தி வத்ராவின் பெயர் அரசியல் காரணங்களுக்காகவே சேர்க்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் காங்கிரஸ் தலைவர்களை மத்திய அரசின் தூண்டுதலோடு அமலாக்கத்துறை குறிவைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவரான நானா படோலி, "காங்கிரஸ் கட்சியைப் பார்த்து பாஜக அஞ்சுகிறது. மகாத்மா காந்தியைப் பார்த்து பிரிட்டீஷார் அஞ்சினர். தற்போது காந்தி குடும்பத்தைப் பார்த்து மத்திய அரசு அஞ்சுகிறது. உண்மையான மக்கள் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது" என குற்றம் சாட்டியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE