“தமிழக அரசியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த்” - பிரதமர் மோடி புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நண்பர் விஜயகாந்த் ஒரு சிறந்த நடிகர், நீடித்த அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்று பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். தமிழ் சினிமாவின் ஆளுமைகளின் ஒருவரான விஜயகாந்த் தனது சிறந்த நடிப்பின் மூலம் கோடிக்கணக்கான இதயங்களை கவர்ந்துள்ளார். அரசியல் தலைவராக தமிழக அரசியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எனது நெருங்கிய நண்பராக இருந்தவர். கடந்த காலங்களில் அவருடனான சந்திப்புகளை நினைவுகூர்கிறேன். மிகுந்த வருத்தத்திற்குரிய இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE