இந்தியாவில் இந்த ஆண்டு அதிகம் கவனம் ஈர்த்த அரசியல் முகங்களை பற்றி சற்றே ரீவைண்ட் செய்து பார்க்கலாம். குறிப்பாக பாசிட்டிவ், நெகட்டிவ், சாதனை, சோதனை, சர்ச்சை உள்ளிட்ட காரணங்களால் முதன்மைச் செய்திகளில் வெகுவாக வலம் வந்ததன் அடிப்படையில் இந்தப் பட்டியலை அணுகுவோம்.
பிரதமர் மோடி: இந்த ஆண்டு சர்வதேச நாடுகளுக்கிடையே இந்தியாவின் முகமாக மாறியிருக்கிறார் பிரதமர் மோடி. இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா தனது 'அனைத்து திறன்களையும்' பயன்படுத்த வேண்டும் என்று உலக தலைவர்கள் இந்தியாவுக்கு அழைப்பு விடுப்பது உலக அரங்கில் பிரதமர் மோடியின் நன்மதிப்பை காட்டுகிறது. நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை படைத்துள்ளது இந்தியா.
சந்திரயான்-3 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு உத்வேகம் அளித்தவர் பிரதமர் மோடி என்று உலக நாடுகள் மோடியை புகழ்ந்து வருகின்றனர். இதனிடையே, இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதையடுத்து, மோடி மற்றும் ஆஸ்திரேலிய துணை பிரதமர் ஆகியோர் இணைந்து பேட் கம்மின்ஸிடம் கோப்பையை வழங்கினர். அந்தச் சம்பவம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது.
மேலும், ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி, இந்தியாவின் சாதனைகளுக்கு மேலும் ஒரு வலுவை சேர்த்தார் மோடி. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து தனது ஆளுமையை மக்களுக்கு பறைசாற்றினார். பப்புவா நியூ கினியா, பிஜி மற்றும் பலாவ் ஆகிய நாடுகளின் உயரிய சிவிலியன் விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார். அத்துடன், யூடியூப் சேனலில் 2 கோடி பின்தொடர்வோரை கொண்ட முதல் உலகத் தலைவர் என்ற பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது.
ராகுல் காந்தி: காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக அறியப்படுகிறவர் ராகுல் காந்தி. மக்களவைத் தேர்தலை மையமாகக் கொண்டு பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டு இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த யாத்திரை ஜனவரியில் முடிவடைந்தது.
இதையடுத்து, ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கினார். காங்கிரஸின் விழுதையே ஆட்டிவிட்டது ஒரு வழக்கு. மோடி குடும்பப் பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார். 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இதில் ராகுலுக்கான சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்ததைத் தொடர்ந்து, அவருக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்பட்டது. அண்மையில், விவசாயிகள், கூலித் தொழிலாளிகள், லாரி ஓட்டுநர்கள் எனப் பல்வேறு தரப்பு மக்களைச் நேரில் சென்று சந்தித்து ராகுல் காந்தி உரையாடி வருவது கவனம் பெற்றது.
மல்லிகார்ஜுன கார்கே: மோடி அலை காரணமாக மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி இரண்டாவது முறையாக தொடர்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து, தலித் தலைவரான கார்கேவை கட்சியின் தேசியத் தலைவராக அமர்த்தியது காங்கிரஸ்.
கார்கே தனது 43 வருட அரசியல் அனுபவத்தில் 9 முறை தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்துள்ளார். மேலும், 2 முறை மக்களவை எம்.பி.யாக இருந்த அவர், தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த 28 எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இண்டியா கூட்டணியின் முக்கியத் தலைவராக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், பிரதமர் வேட்பாளராகவும் முக்கியத் தலைவர்கள் சிலரால் முன்மொழியப்பட்டுள்ளார். நாடாளுமன்றம் தொடங்கி மக்கள் பிரச்சினை வரை கார்கேவின் குரல், காங்கிரஸுக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.
நிதிஷ் குமார்: பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார் இந்தியாவின் மூத்த அரசியல்வாதியாக வலம் வருகிறார். நாடு முழுவதும் பரவலாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான குரல் எழுவதற்கும் காரணமாகத் திகழ்ந்தவர். எனினும், சில மாதங்களுக்கு முன்பு மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து நிதிஷ் குமார் சட்டப்பேரவை கூட்டத்தில் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையான நிலையில், அதற்காக மன்னிப்பு கேட்டார்.
மிகக் குறிப்பாக, இண்டியா கூட்டணி உருவாக முக்கியப் புள்ளியாக இருந்தவர். தற்போது பிரதமருக்கான ரேஸில் கார்கேவுக்கு ஃடப் கொடுத்தும் வருகிறார். அண்மையில் டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் நான்காவது கூட்டத்தில் இந்தி பேச்சை மொழிபெயர்க்குமாறு கூறிய திமுக எம்.பி டி.ஆர்.பாலுவிடம் நிதிஷ் குமார் ஆவேசம் அடைந்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியதும் கவனிக்கத்தக்கது.
டி.கே.சிவக்குமார்: 2023-ல் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. முடிவுகள் வந்துவிட்டபோதும் முதல்வர் நாற்காலியில் யார் அமர்வார்கள் என்ற ஒரு கேள்வி அப்போது எல்லோர் மனதிலும் உலா வந்தது. சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் தலைப்புச் செய்திகளாக மாறினார்கள். ஆனால், முதல்வராக அமர்த்தப்பட்டார் சித்திராமையா. கே.டி சிவக்குமாரிடம் 2020-ஆம் ஆண்டில், கர்நாடக மாநில தலைவர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அப்போது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் மிக மோசமான நிலைமையில் இருந்த நேரம் என கூறப்படுகிறது.
1989-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, காங்கிரஸை விட்டு அவர் வேறு எங்கும் செல்லவில்லை. காங்கிரஸின் தீவிர விசுவாசியான இவர் 2023-ல் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். இரவும் பகலும் கடினமாக உழைத்து அடிமட்டத் தொண்டர்களில் இருந்து உயர்மட்டத் தலைமை வரை நன்மதிப்பை பெற்றுள்ளார். தற்போது கர்நாடக துணை முதல்வராக இருக்கிறார்.
மஹுவா மொய்த்ரா: நாடாளுமன்றத்தில் ஆளும் அரசை கேள்விக் கனைகளால் துளைத்தெடுத்தவர் மஹுவா மொய்த்ரா. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமான இவர், மக்களவையில் இதுவரை கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இந்தக் கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது குறித்து பாஜக எம்.பி. வினோத் குமாா் சோன்கார் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை நவ.9-ஆம் தேதி வெளியிட்டது. அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி அவரின் பதவி பறிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் முக்கிய பெண் எம்.பியாக தனது இருப்பை காட்டி வந்தவர் என்பது கவனிக்கத்தக்கது. இது அவரது 14 ஆண்டு கால அரசியல் வாழ்க்கைக்கு பலத்த அடியாகக் கருதப்படுகிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் அவரது செல்வாக்கு குறையவில்லை என்கிறது திரிணமூல் காங்கிரஸ்.
மணீஷ் சிசோடியா: டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இந்தச் சூழலில் புதிய மதுபானகொள்கையின்படி மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கியது உட்பட பல்வேறு விவகாரங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தலைமைச் செயலாளர் நரேஷ்குமார், டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் அறிக்கை அளித்தார். அதன்பேரில் சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார்.
கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 36 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஊழல் தொடர்பாக மணீஷ் சிசோடியாவிடம் பலமுறை விசாரணை நடத்தப்பட்டது. இதன்தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். சிசோடியா ஜாமீன் கோரி பல முறை மனு தாக்கல் செய்த நிலையில், ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வருகிறது. அவரின் நீதிமன்ற காவலை ஜனவரி 10, 2024 வரை நீட்டித்து நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் இந்திய பெரிய அளவில் பேசுபொருளானது.
அஜித் பவார்: சரத் பவாரின் மூத்த சகோதரர் ஆனந்த்ராவ் என்பரின் மகன்தான் இந்த அஜித் பவார். 2009-ஆம் ஆண்டு வரை, சரத் பவாருக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் இவர்தான் என்று சொல்லப்பட்டது. ஆனால், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, கடந்த ஜூலை மாதம் அந்த கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்தது மகாராஷ்டிராவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அஜித் பவார் உட்பட அந்தக் கட்சியைச் சேர்ந்த 8 பேர், ஜூலை 9-ஆம் தேதி மகாராஷ்டிராவிலுள்ள பாஜக கூட்டணி அரசில் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். சரத் பவாரை பழிவாங்க, அஜித் பவாரை பகடைக்காயாக பயன்படுத்திக்கொண்டது என்றும் கூறப்படுகிறது. தற்போது மகாராஷ்டிர துணை முதல்வராக வலம் வருகிறார் அஜித் பவார்.
ரேவந்த் ரெட்டி: ரேவந்த் ரெட்டி ஆரம்ப காலத்தில் பாஜக ஆதரவாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். 40 ஆண்டு கால தீவிர அரசியல் அனுபவம் கொண்ட கேசிஆரை வீழ்த்தி, முதல்வர் என்ற அரியணையை கையில் ஏந்திக் கொண்டுள்ளார் ரேவந்த் ரெட்டி. தற்போது அத்தனை ஊடகத்தின் கவனமும் ரேவந்த் ரெட்டியை நோக்கித் திரும்பியுள்ளது. தேர்தல் யுக்திகளை வகுப்பதில் வல்லவர் என்பதே இவரின் பெரிய பலமாக கருதப்படுகிறது. அனைத்து கட்சிகளிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு எனச் சொல்லப்படுகிறது.
பிரிஜ் பூஷண் சிங்: இந்திய அளவில் அதிகம் உச்சரிகப்பட்ட வார்த்தையாக மாறியிருக்கிறது பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் பெயர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் கடந்த மூன்று முறை தொடர்ச்சியாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகப் பதவி வகித்தார். அதேபோல கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி-யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இளம் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து பெரும் சர்ச்சையானது. கடந்த ஜனவரியில் இது தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தை தொடங்கினார்கள். இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களைக் கிளப்பியது.
இதனையடுத்து, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் புகார்களை அளித்தனர். பின்னர் போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப் பெறப்பட்டது. ஆனால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வீரர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினார்கள். இது மத்திய அரசுக்கு கடும் தலைவலியை கொடுத்தது.
ஆனால், தற்போது பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் மல்யுத்த போட்டியிலிருந்தே விலகுவதாக கண்ணீர் மல்கப் பேட்டியளித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்பு ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு, தற்காலிகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ‘இனி மல்யுத்த கூட்டமைப்புக்கு என்ன நடந்தாலும் அது என் கவலை இல்லை. மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்’ என்று பிரிஜ் பூஷன் அறிவித்ததும் கவனம் பெற்றது.
உதயநிதி: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதியின் ஐந்து வரிப் பேச்சு, பாஜகவுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் பெரும் ஆயுதமாகவே மாறியது. ‘கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றைப் போன்றதுதான் சனாதனம். இவற்றை ஒழிப்பதைப்போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என்ற இந்தப் பேச்சு இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்காக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
உதயநிதி பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்தன. சனாதன தர்மம் குறித்த திமுக தலைவர்களின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை. இதுபோன்ற கருத்துகளை இந்திய அரசமைப்பு சாசனம் ஏற்கவில்லை என காங்கிரஸ் வெளிப்படையாகவே அறிவித்தது. 'சனாதனம் குறித்த என் பேச்சில் தவறேதும் இல்லை, சட்டப்படி சந்திப்பேன்' என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிவருவது இந்திய அளவில் கவனம் பெற்றது.
சந்திரபாபு நாயுடு: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாட்டு நிதியில் ரூ.371 கோடி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர் ஆந்திர சிஐடி போலீஸார் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கைது செய்தனர். பின்னர் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதோடு, எம்எல்ஏ சீட்டு கொடுப்பதாக கூறி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தன்னை ஏமாற்றியதாக நடிகை கவிதா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரண்டு தினங்களுக்கு முன்பு சந்திரபாபு நாயுடுவை அமராவதியில் உள்ள அவரது வீட்டில், அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியது கவனம் ஈர்த்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago