வாஜ்பாய் - அத்வானியுடன் ஒப்பிட்டு மோடி - அமித் ஷாவை சாடிய டெரிக் ஓ பிரையன்!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவை அத்துமீறல் விவகாரத்தில் மத்திய அரசின் மவுனத்தை கடுமையாக விமர்சித்துள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், “நாடாளுமன்றம் ஆழ்ந்த இருள் நிறைந்த கூடமாக மாறியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வாஜ்பாய் - அத்வானியுடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சாடியுள்ளார்.

இது குறித்து திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இப்போது போல் இல்லாமல் பழைய நாடாளுமன்றம் தாக்கப்பட்டபோது அப்போதைய பிரதமரும், உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் தாக்குதல் குறித்து அறிக்கை அளித்தனர்” என்று பிரதமர் மோடி - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - உள்துறை அமைச்சர் அத்வானியுடன் ஒப்பிட்டு சாடியுள்ளார். அந்தப் பதிவின் விவரம்:

2001 நாடாளுமன்ற தாக்குதல்: 3 வேலை நாட்களில் நாடாளுமன்றத்தில் முழு அளவிலான விவாதம் நடந்தது. அப்போதைய பிரதமர் மாநிலங்களவையில் அறிக்கை அளித்துப் பேசினார். உள்துறை அமைச்சர் மக்களவையில் அறிக்கை அளித்தார்.

2023 மக்களவை அத்துமீறல்: மத்திய அரசு மவுனமாக இருக்கிறது. சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரியதற்காக 146 எம்.பி.கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றம் ஆழமான இருள் நிறைந்த கூடமாக மாறியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 13-ம் தேதி நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாளில், மக்களவை பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகிய இரு இளைஞர்கள் திடீரென கீழே குதித்து மறைத்து வைத்திருந்த புகை கக்கும் குப்பிகளை இயக்கி அவையை புகை மயமாக்கினர். இதையடுத்து அங்கிருந்த எம்.பிக்கள் இருவரையும் பிடித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த டெல்லி போலீஸார், அவைக்கு வெளியே இருவருக்கு ஆதரவாக புகையை வெளியிட்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் தொடர்புடைய விஷால் சர்மா, இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் லலித் ஜா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அனைவர் மீதும் உபா சட்டப்பிரிவு உள்பட பல்வேறு கடுமையான பிரவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவை அடுத்து, இந்த சம்பவம் குறித்து உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

146 எம்.பி.கள் இடைநீக்கம்: இந்த அத்துமீறல் சம்பவம் தொடர்பாக அவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி வந்தனர். எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன. அவை செயல்பாடுகளுக்கு இடையூறாக ஒழுங்கீனமாக செயல்பட்டதாக கூறி மக்களவையில் சுமார் 100 எம்.பி.களும், மாநிலங்களவையில் 46 எம்.பி.களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த விவாகரம் தொடர்பாக மாநிலங்களவையில் முதலில் இடைநீக்கம் செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னரும் அவையில் இருந்தார் என அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த விவகாரம் நாடாளுமன்ற சிறப்பு உரிமை மீறல் குழு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

பழைய நாடாளுமன்ற தாக்குதலும் விளக்கமும்: நாடாளுமன்றத்தின் பதிவுகளின்படி, கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் சம்பவம் நடந்த பின்னர், இரு அவைகளிலும் தாக்குதல் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போதைய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி விவாதத்தின்போது பதில் அளித்துப் பேசினார். அதேநேரம் பிரதமர் வாஜ்பாய் இரு அவைகளிலும் பங்கேற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE