மதுரை அதிகாரி அங்கித் கைது விசாரணையை டெல்லிக்கு மாற்றியது அமலாக்கத் துறை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி மீதான வழக்கு விசாரணையை டெல்லி தலைமையகத்துக்கு அமலாக்கத் துறை மாற்றம் செய்துள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுரேஷ்பாபு மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்காமல் இருக்க, மதுரை அமலாக்கத் துறை அங்கித் திவாரி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கடந்த 1-ம் தேதி கைது செய்யப்பட்டார். பிறகு, மதுரையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

இதையடுத்து, ‘‘35 பேர் வாரன்ட் இல்லாமல் சட்ட விரோதமாக அத்துமீறி அமலாக்கத் துறை அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்’ என்று தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியது. முக்கிய ஆவணங்கள் எத்தனை நகல் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இதனால் முக்கிய வழக்குகளில் ரகசியம் காக்கப்பட வேண்டிய சாட்சிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

திமுக அமைச்சர்கள் பலர் மீதான ஊழல் வழக்குகளை அமலாக்கத் துறை விசாரித்து வரும் நிலையில் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நகல் எடுத்திருக்கலாம் என அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கிடையே, பணி செய்யவிடாமல் தடுத்ததாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது மதுரை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். லஞ்ச வழக்கில் அங்கித் சிக்கியதால், தமிழக லஞ்ச ஒழிப்பு துறையின் வழக்கை விசாரிக்க அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு (இசிஐஆர்) செய்தது. இதில், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறை - மத்திய அரசின் அமலாக்கத் துறை இடையே மோதல் எழுந்துள்ள நிலையில், அங்கித் மீதான வழக்கில் இரு அமைப்பும் தனித்தனியாக விசாரணை தொடங்கின.

இந்நிலையில், அங்கித் மீதான வழக்கை அமலாக்கத் துறை டெல்லி தலைமையகத்துக்கு மாற்றியுள்ளது. இதன்மூலம் அங்கித் திவாரியையும், இந்த வழக்கு விசாரணையையும், அமலாக்கத் துறையிடம் லஞ்ச ஒழிப்பு துறை ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE