“புதிய இந்திய தண்டனைச் சட்டம் மிகவும் கொடூரமானது; ஏழைகளுக்கு எதிரானது” - ப.சிதம்பரம் கண்டனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: புதிய இந்திய தண்டனைச் சட்டம் மிகவும் கொடூரமானது. ஏழைகள், உழைக்கும் வர்க்கம் மற்றும் நலிந்த பிரிவினருக்கு எதிராக இந்தச் சட்டம் அடக்குமுறைக் கருவியாக மாறும். 2024 ஆம் ஆண்டில் அடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கம் முதலில் இந்த சட்டங்களை மறு ஆய்வு செய்து, இந்த கடுமையான விதிகளை அகற்ற வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

பழைய குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் விதமாக மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. அதாவது, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா ஆகிய 3 மசோதாக்களையும் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 12-ம் தேதி அறிமுகம் செய்தார். இதன் மீதான விவாதம் மக்களவையில் கடந்த வாரம் நடந்தது. தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த 3 புதிய குற்றவியல் தடுப்பு சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் பூதாகரமாக வெடித்த நிலையில், 140-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், "கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்கள் முடிவடைய உள்ள நிலையில், மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார் என்ற செய்தியைக் அறிகிறோம். இந்தப் புதிய இந்திய தண்டனைச் சட்டம் மிகவும் கொடூரமானது. ஏழைகள், உழைக்கும் வர்க்கம் மற்றும் நலிந்த பிரிவினருக்கு எதிராக இந்தச் சட்டம் அடக்குமுறைக் கருவியாக மாறும். பெரும்பாலான கைதிகள் (விசாரணையின் கீழ் உள்ளவர்கள் உட்பட) ஏழைகள் மற்றும் தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் அரசியலமைப்புக்கு முரணான மற்றும் அரசியலமைப்பின் 19 மற்றும் 21 வது பிரிவுகளை மீறும் பல விதிகள் இருக்கின்றன. புதிய தண்டனைச் சட்டம் மற்றும் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பாதிப்பை ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் சுமக்க நேரிடும். புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் சரியான செயல்முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, சுதந்திரம் (freedom) மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் (personal liberty) ஆகியவற்றைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் பல விதிகள் இருக்கின்றன. காவல்துறை ஒரு சிறைக் கைதிக்கு 60 முதல் 90 நாட்கள் வரை காவலை நீட்டிக்க முடியும் என்ற புதிய விதி, காவல்துறையின் அத்துமீறலுக்கு மட்டுமே வழிவகுக்கும். எனவே, 2024-ம் ஆண்டில் அடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கம் முதலில் இந்தச் சட்டங்களை மறு ஆய்வு செய்து, இந்த கடுமையான விதிகளை அகற்ற வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE