“ஏழைகளுக்கான சேவைக்கு அரசு முன்னுரிமை” - ம.பி. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதி

By செய்திப்பிரிவு

இந்தூர்: ஏழைகளுக்கான சேவைக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹுகும்சந்த் மில்கடந்த 1992-ல் மூடப்பட்டது. தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கேட்டு, நீண்டகால சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மத்தியபிரதேச அரசு மேற்கொண்ட முயற்சியின் பலனாக, மாநில வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு,கடந்த டிசம்பர் 20-ம் தேதி நிலுவைத் தொகை உயர் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டது.

இந்நிலையில் மில் தொழிலாளர்களுக்கு ரூ.224 கோடி மதிப்பிலான நிலுவைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று இந்தூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலான பங்கேற்று பேசியதாவது: நீண்ட காலமாக நிலுவையில் இருந்த தொழிலாளர் பிரச்சினையை தீர்த்து வைத்ததற்காக மத்திய பிரதேச அரசை பாராட்டுகிறேன். இதன் மூலம் 4,800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலன் அடைவார்கள்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளில் அனுசரிக்கப்படும் நல்லாட்சி தினத்தில் தொழிலாளர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவது இரட்டை இன்ஜின் பாஜக அரசுக்கும் மாநில மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகிய நான்கு ஜாதிகள் எனக்கு மிகவும் முக்கியம்.

ஏழைகளுக்கான சேவை, தொழிலாளர்களுக்கு மரியாதை, தாழ்த்தப்பட்டவர்களுக்கு மரியாதை ஆகியவை எங்கள் முன்னுரிமைப் பணியாக உள்ளது. நாட்டின் தொழிலாளர்கள் அதிகாரம் பெற்று, வளமான இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே எங்கள் அரசின் இலக்கு ஆகும்.

தூய்மை மற்றும் சுவைக்கு பெயர் பெற்றது இந்தூர். இந்த நகரம் பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளது. இந்தூரின் வளர்ச்சியில் இங்குள்ள ஜவுளித் தொழில் முக்கியப் பங்காற்றியுள்ளது. பாஜகவின் இரட்டை இன்ஜின் அரசு ஆட்சிக் காலத்தில் இந்தூரின் சுற்றுப்புறங்களில் ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். சமீபத்திய தேர்தலின்போது பாஜக அளித்த உத்தரவாதங்களை நிறைவேற்றும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ம.பி.யின் கார்கோன் மாவட்டத்தில் சாம்ராஜ், அஷுகேடி ஆகிய கிராமங்களில் நிறுவப்படும் 60 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE