இந்தியாவில் புதிதாக 628 பேருக்கு கோவிட் பாதிப்பு; கேரளாவில் ஒருவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 628 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், கேரளாவில் ஓர் உயிரிழப்பும் பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் 315 பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதற்கிடையே, மகாராஷ்டிராவில் உள்ள தானேவில் 20 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. அதில், ஜேஎன்.1 வகை மாறுபாடு 5 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜேஎன்1 என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஒரேநாளில் புதிதாக 656 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை 3,742 ஆக அதிகரித்திருந்தது. அன்றைய தினமும் கேரளாவில் ஒருவர் உயிரிழந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

அதேவேளையில், இந்தியாவில் ஜேஎன்1 என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்தப் புதிய வகை கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதால் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பரிசோதனைகள் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE