‘‘உத்தர பிரதேசம், பிஹாரில் இந்தியை மட்டும் கற்றவர்கள் தமிழ்நாட்டுக்கு கட்டிடங்கள் கட்டவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும்தான் வருகின்றனர்’’ என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் கூறியதற்கு பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சனாதனம் குறித்து திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகு, 3 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த திமுக எம்.பி. செந்தில்குமார், ‘பசு கோமிய’ மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். பின்னர் அவர் மன்னிப்பு கேட்டார்.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் இந்தி பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த நிதிஷ்குமார், ‘‘இந்தி நம் தேசிய மொழி. தேசிய மொழியை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எனவே, நீங்கள் இந்தி கற்றுக் கொள்ளுங்கள்’’ என்று கூறினார். இது, சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உத்தர பிரதேசம், பிஹார் மாநிலங்களை சேர்ந்த இந்தி பேசும் மக்கள் பற்றி திமுக எம்.பி. தயாநிதி மாறன் விமர்சித்து பேசும் வீடியோவை பாஜக தலைவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு, இதற்கு நிதிஷ்குமார், லாலுபிரசாத் யாதவ் போன்ற இண்டியா கூட்டணி தலைவர்களின் கருத்தை கேட்டுள்ளனர்.
‘‘ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஐ.டி. நிறுவனங்களில் நல்ல சம்பளத்துக்கு வேலைக்கு செல்கின்றனர். ஆனால் சிலர் இந்தி, இந்தி என கூறுகின்றனர். உ.பி மற்றும் பிஹாரில் இந்தியை மட்டும் கற்றவர்கள் தமிழ்நாட்டுக்கு கட்டிடங்கள் கட்டவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும்தான் வருகின்றனர். இந்தியை மட்டும் கற்றால் இதுதான் நிலைமை’’ என்று தயாநிதி மாறன் கூறுவதாக அந்த வீடியோ காட்சி உள்ளது. இது தற்போது வைரலாக பரவி வருகிறது.
தயாநிதி மாறனின் இந்த பேச்சுக்கு பிஹார் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘எந்த கட்சி தலைவராக இருந்தாலும் சரி, இதுபோன்ற கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். இந்தியா ஒரே நாடு. மற்ற மாநில மக்களை நாங்கள் மதிக்கிறோம். அதேபோலதான் அனைவரும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்’’ என்று அவர் கூறியுள்ளார்.
உழைப்பது குற்றமா? மத்திய அமைச்சரும், பிஹார் பாஜக மூத்த தலைவருமான கிரிராஜ் சிங், ‘‘நாட்டை துண்டாக்குவதுதான் காங்கிரஸ் மற்றும் திமுகவின் வேலை. பிஹார் மக்கள் எங்கு சென்றாலும் கடினமாக உழைக்கின்றனர். தன்மானத்துடன்உழைப்பது குற்றம் அல்ல. மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் பங்களிக்கின்றனர். சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறியவர்கள், இப்போது தொழிலாளர்களை புண்படுத்தியுள்ளனர். இதுபோன்ற கருத்துகளை கேட்டு ராகுல் காந்தி மகிழ்வது வருத்தத்துக்குரியது’’ என்றார்.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா, ‘‘திமுக மூத்த தலைவரின் இந்த கருத்துக்கு, தங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை நிதிஷ்குமாரும், ராகுல் காந்தியும் விளக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.
பழைய வீடியோ.. இதற்கிடையே, தயாநிதி மாறன் பேசியதாக பகிரப்படும் வீடியோ பழமையானது. அதை பாஜக மீண்டும் பரப்புகிறது என்று தெரிவித்துள்ள திமுக, ‘‘வெள்ள நிவாரண கோரிக்கையில் தமிழக அரசுக்கும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கவனத்தை திசை திருப்பவே பழைய வீடியோவை பாஜக மீண்டும் பரப்புகிறது’’ என்று குற்றம்சாட்டியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago