இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாக அமைப்பு இடைநீக்கம் - மத்திய விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாக அமைப்பு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய நிலையில், மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் போராட்டம், பல்வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங்களால் தேர்தல் பல முறை தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து நிர்வாகிகளுக்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்த தவறிய காரணத்துக்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உலக மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்திருந்தது. இந்தப் பின்னணியில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் டிச.21 (வியாழக்கிழமை) அன்று டெல்லியில் நடைபெற்றது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்தத் தேர்தல் மூலம் கூட்டமைப்பின் தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர், துணைத் தலைவர் உட்பட 15 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு முன்னாள் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அனிதா ஷியோரன், உத்தரப் பிரதேச மல்யுத்த கூட்டமைப்பின் துணைத் தலைவர் சஞ்சய் இருவருக்கும் இடையில் நேரடிப் போட்டி நிலவியது.

ஹரியாணாவைச் சேர்ந்த அனிதா ஷியோரன், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு ஒடிசாவில் இருந்து போட்டியிட்டார். இவருக்கு கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் கூறி, அவருக்கு எதிராக போராடிய சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் போன்ற நட்சத்திர வீரர்களின் ஆதரவு இருந்தது. மறுபுறம் பிரிஜ் பூஷனின் நெருங்கிய உதவியாளரான சஞ்சய் சிங், சமீப காலங்களில் ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கம் பெற்றுத்தந்த விளையாட்டான மல்யுத்தத்தின் பொற்காலத்தை மீண்டும் உருவாக்குவேன் என்று உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், தேர்தலில் சஞ்சய் சிங் மொத்தமுள்ள 47 வாக்குகளில் 40 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தலைவர் பதவிக்கான தேர்தலுடன் மூத்த துணைத் தலைவர், நான்கு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், இரண்டு இணை செயலாளர்கள் மற்றும் 5 நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெற்றது. இதில் 4 துணைத் தலைவர் பதவிகளையும் பிரிஜ் பூஷண் அணியினரே வென்றனர். கூட்டமைப்பின் புதிய பொருளாளராக பிரிஜ் பூஷண் அணியினைச் சேர்ந்த உத்தரப் பிரதேசத்தின் சத்யபால் சிங் தேஷ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த துஷ்யந்த் சர்மாவை தோற்கடித்தார். அதேபோல், ஐந்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவியையும் பிரிஜ் பூஷண் அணியே கைப்பற்றியது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக, பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக அறிவித்ததோடு, தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திரும்ப ஒப்படைப்பதாக கூறி, கடந்த 22ம் தேதி விருதை பிரதமர் இல்லத்தின் வாசலில் வைத்துவிட்டுச் சென்றார். இந்த இருவரை தொடர்ந்து வீரேந்தர் சிங்கும் மல்யுத்த விளையாட்டில் ஈடுபட போவதில்லை என நேற்று அறிவித்தார்.

இதனிடையே, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வான சஞ்சய் சிங், 15 வயதுக்கு உட்பட்ட மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் உத்தரப்பிரதேசத்தின் கோண்டாவில் உள்ள நந்தினி நகரில் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளிட்டார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கும் புதிய நிர்வாகிகள் விஷயத்தில் கடும் அதிருப்தி ஏற்பட்ட நிலையில், அந்த நிர்வாக அமைப்பை இடைநீக்கம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய வியைாட்டுத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த இடைநீக்கம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்