ம.பி. தேர்தலில் பாஜக அமோக வெற்றி: 6 ஆண்டுக்கு பின் காலணி அணிந்த மூத்த தலைவர்

By செய்திப்பிரிவு

போபால்: மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்ட பாஜக தலைவராக ராம்தாஸ் புரி உள்ளார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங்கின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்படுகிறார்.

கடந்த 2018-ம் ஆண்டில் மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அதற்கு முன்னதாக தேர்தலில் பாஜக வெற்றி பெறும் வரை காலணி அணிய மாட்டேன் என்று அவர் சபதமேற்றார்.

ஆனால் 2018 தேர்தலில் பாஜக தோல்வியை தழுவி, காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கடந்த 2020-ம்ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து மீண்டும் பாஜக ஆட்சி பொறுப்பேற்றது. அப்போது பாஜகமூத்த தலைவர்கள் வலியுறுத்தியும் 2023-ம் ஆண்டு தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றால் மட்டுமே காலணி அணிவேன் என்று ராம்தாஸ் புரி திட்டவட்டமாக அறிவித்தார்.

கடந்த நவம்பரில் நடைபெற்ற மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றது. இந்த சூழலில் முன்னாள்முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று அனுப்பூர் பகுதிக்கு சென்றார். அங்கு அவரது முன்னிலையில் ராம்தாஸ் புரி மீண்டும் காலணி அணிந்தார். இதுகுறித்து சவுகான் கூறும்போது, “ராம்தாஸ் போன்ற வர்கள் இருப்பதால்தான் பாஜக உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE