“பேச எதுவும் இல்லை!” - மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் பதில்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் நான் ஏற்கெனவே போதுமான அளவுக்கு பேசிவிட்டேன். இதற்குமேல் இது குறித்துப் பேச எதுவும் இல்லை என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் 40 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று புதிய தலைவரானார். அவரை எதிர்த்து நின்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முன்னாள் வீராங்கனையான ஹரியாணாவைச் சேர்ந்த அனிதா ஷிரான் தோல்வியடைந்தார்.

இதன் தொடர்ச்சியக, புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்ஜய் சிங் தோ்வானதற்கு சாக்‌ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் விளையாட்டிலிருந்து விலகி தனது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியாவைத் தொடர்ந்து மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங்கும் மல்யுத்த விளையாட்டில் இனி ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார். பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிவரும் சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக வீரேந்தர் சிங் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் தனது பத்மஸ்ரீ விருதையும் திரும்ப ஒப்படைக்கப் போவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா பெங்களூரில் நடைபெற்றது. அதில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்தது குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அனுராக் தாக்குர், “இந்த விவகாரத்தில் நான் ஏற்கெனவே போதுமான அளவுக்கு பேசியிருக்கிறேன். இதற்கு மேல் இது குறித்துப் பேசு எதுவும் இல்லை” என நழுவிவிட்டார்.

பிறகு அவர், “நமது விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் 100-க்கும் அதிகமான பதக்கங்களை வென்றுள்ளனர். அவர்களது சாதனைகள் பெரிய அளவில் பேசப்பட வேண்டும். எதிர்காலத்திலும் இது மாதிரி சிறப்பான பங்களிப்பை அவர்கள் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE