கர்நாடகாவில் ஹிஜாப் தடை நீக்க விவகாரம்: பாஜக குற்றச்சாட்டும், காங்கிரஸ் பதிலடியும்!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை நீக்குவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்த விவகாரம், காங்கிரஸ் - பாஜக இடையே வார்த்தைப் போரை முடுக்கிவிட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் தள பதிவொன்றில், “பிரதமர் மோடி ‘சப் கா சாத் சப் கா விகாஸ்’ என்று கூறுவது ஏமாற்று வேலை. பாஜக வேலை, ஆடை, சாதி அடிப்படையில் மக்களையும் சமூகத்தையும் பிரிக்கும் பணியைச் செய்கிறது. ஹிஜாப் தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.

பாஜக குற்றச்சாட்டு: இந்நிலையில், கர்நாடகாவில் ஹிஜாப் தடையை நீக்கும் உத்தரவு மாநிலத்தில் ‘ஷரியத் சட்டத்தை’ அமல்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது வெறும் ஹிஜாப் தடையை நீக்கும் உத்தரவு மட்டும் இல்லை, மாறாக மாநிலத்தில் ஷரியத் சட்டத்தை நிறுவதாகும். நாட்டில் ராகுல் காந்தி, காங்கிரஸ், இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால் பின்னர் இங்கு இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்படும். இது சனாதன தர்மத்தை அழிக்க திட்டமிட்டு செய்யப்பட்ட சதி" என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, “முதல்வர் சித்தராமையா வரும் 2024 மக்களவைத் தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறார் என்று குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எல்லா இடங்களிலும் ஹிஜாப் அணியப்படுகிறது. அது ஆடை குறித்த பிரச்சினை. சித்தராமையா பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் வித்தியாசத்தை உருவாக்க முயற்சிக்கிறார். வாக்கு வங்கி அரசியலுக்காக இதனைச் செய்கிறார். இந்த விவகாரம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில், முதல்வர் இதனை கண்டுகொள்ளவில்லை. மக்களவைத் தேர்தலுக்காக அவர் சிறுபான்மையினரை திருப்திப்படுத்த விரும்புகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

மாநில பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா கூறுகையில், "ஹிஜாப் தடை உத்தரவை நீக்கச் சொல்லி யாரும் கோரிக்கை விடுக்கவில்லை. முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதற்காக சித்தராமையா இவ்வாறு தெரிவித்துள்ளார். தனது அறிக்கையை திரும்ப பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். அவரது மகனும் கர்நாடகா பாஜக தலைவருமான விஜயேந்திரா, “கல்வி நிறுவனங்களில் இருந்த ஹிஜாப் தடை நீக்கும் உத்தரவு எங்களது கல்வி நிறுவனங்களில் இருக்கும் மதச்சார்பின்மை குறித்த கவலையை அதிகரித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பதிலடி: பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் அரசு, ‘சட்டத்துக்கு உட்பட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை அரசியலாக்கக் கூடாது’ என்று வலியுறுத்தியுள்ளது. மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரயங்க் கார்கே கூறுகையில், "பாஜகவுக்கு அரசியல் சாசனம் குறித்து தெரியுமா என்பது எனக்கு தெரியவில்லை. அவர்கள் அரசியலமைப்பு சட்டங்களை படிக்க வேண்டும். கர்நாடகாவின் வளர்ச்சிக்கு பாதகமான சட்டங்கள், கொள்கைகள் கவனிக்கப்படாது. தேவைப்பட்டால் அவை நீக்கப்படும்" என்று தெரிவித்தார்.

மற்றொரு அமைச்சரான மது பங்காரப்பா கூறுகையில், “இதில் எந்தவகையான அரசியலுக்கும் இடமில்லை. மாநிலத்தின் கல்விக் கொள்கை என்பது கலாச்சாரம், கல்வி மற்றும் பிற விஷயங்களை உள்ளடக்கியது. பாஜகவினர் எப்போதும் அவர்கள் செய்த முன்னேற்றத்தைப் பற்றி பேச மாட்டார்கள். இதுபோன்ற விஷயங்களை சட்டபூர்வமாகவே அணுகுவர்" என்றார். அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், "முதல்வர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு சட்டம் தெரியும். அவருக்கு எங்களது முந்தைய நிலைப்பாடும் தெரியும். காங்கிரஸ் கட்சியின் சிந்தனை போக்கே முதல்வர் பற்றிய எங்களின் சிந்தனையும். பாஜகவுக்கு எதுவும் தெரியாது" என்று தெரிவித்திருந்தார்.

கர்நாடக முதல்வர் விளக்கம்: மைசூரில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், இந்தக் கல்வியாண்டில் இருந்து ஹிஜாப் தடை நீக்கம் அமலுக்கு வருமா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த முதல்வர், “கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு இருந்து வரும் தடையை நாங்கள் இன்னும் திரும்பப் பெறவில்லை. கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது நான், ஹிஜாப் அணிவதற்கான தடையை நீக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்திருந்தேன். அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுப்போம்” என்று தெரிவித்தார்.

பிரச்சினையும் பின்னணியும்: கர்நாடகாவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹிஜாப் தடையை நீக்கம் முன்முயற்சியாக மாநில அரசு ஹிஜாப் அணிந்து போட்டித் தேர்வு எழுத அனுமதி அளித்திருந்தது. கர்நாடாக மாநிலத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உடுப்பி அரசு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அப்போதைய பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்தார். இதற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் தடை செல்லும் என உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 18-ல் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர். ஒரு நீதிபதி, உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லும் எனவும், மற்றொரு நீதிபதி செல்லாது எனவும் தீர்ப்பளித்தனர். பின்னர் நீதிமன்ற அமர்வு இவ்வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்ற வேண்டு்ம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் விடுத்தது. இது இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE