மக்களவை அத்துமீறல் வழக்கில் பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவின் வாக்குமூலம் பதிவு: மத்திய அரசு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் நிகழ்ந்த அத்துமீறல் தொடர்பான வழக்கில், பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13-ம் தேதி நடந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, அத்துமீறலில் ஈடுபட்ட இருவர் மக்களவை பார்வையாளர் மாடத்துக்கு வர அனுமதி பாஸ் வழங்கிய பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை வந்த பிறகு இந்த விவகாரத்தில் சட்டம் அதன் கடமையைச் செய்யும்” என கூறினார்.

பின்னணி: கடந்த 13-ம் தேதி நாடாளுமன்ற மக்களவை பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகிய இரு இளைஞர்கள் திடீரென கீழே குதித்து மறைத்து வைத்திருந்த புகை கக்கும் குப்பிகளை இயக்கி அவையை புகை மயமாக்கினர். இதையடுத்து அங்கிருந்த எம்.பிக்கள் இருவரையும் பிடித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த டெல்லி போலீசார், அவைக்கு வெளியே புகையை வெளியிட்டு கோஷங்களை எழுப்பிய நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் தொடர்புடைய விஷால் சர்மா, லலித் ஜா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அனைவர் மீதும் உபா சட்டப்பிரிவு உள்பட பல்வேறு கடுமையான பிரவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவை அடுத்து, இந்த சம்பவம் குறித்து உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE