“முக்கிய விவாதத்தில் சாதியை நுழைத்தது ஏமாற்றம்” - ஜெகதீப் தன்கர் மீது ப.சிதம்பரம் அதிருப்தி

By செய்திப்பிரிவு

டெல்லி: "ஒரு முக்கியமான விஷயம் பற்றி விவாதிக்கும்போது, சாதியை ஒரு தீவிர விவாதத்துக்கு கொண்டுவந்தது ஏமாற்றத்தை அளிக்கிறது. தனி நபரின் பிறப்பிடம், அவரை விமர்சிக்க ஒரு வாதமாகப் பயன்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது" என ஜெகதீப் தன்கரின் மிமிக்ரி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களவையில் டிசம்பர் 13-ஆம் தேதி நடந்த பாதுகாப்பு மீறல் தொடர்பாகப் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி எம்.பி-க்கள், 146 பேர் தற்போது வரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், எம்.பி.க்கள் சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கரைப் போல மிமிக்ரி செய்து நடித்து காட்டியதை, ராகுல் காந்தி வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அது பேசுபொருளாக மாறியது.

இதையடுத்து, ஜெகதீப் தன்கரின் ஜாட் (Jat) சமூகத்தைச் சேர்ந்த சிலர், எதிர்க்கட்சிகள் தங்கள் சமூகத்தையே அவமதித்தாக போராட்டதிலும் ஈடுபட்டது மேலும் சர்ச்சையானது. இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய ஜெகதீப் தன்கர், ''மிமிக்ரி செய்து எம்.பி. ஒருவர் என்னை அவமதிக்கிறார். அதை இன்னொரு எம்.பி. மொபைலில் படம் பிடிக்கிறார். ஜெகதீப் தன்கர் அவமதிக்கப்படுவதைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது. ஆனால், நாட்டின் குடியரசு துணைத் தலைவரை, விவசாய சமூகத்தை, எனது சமூகத்தை அவமதிப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது. எனது பதவி அவமதிக்கப்படுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த அவையின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது'' என தெரிவித்தார்.

தற்போது, இது குறித்து காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்துல், “ஒரு முக்கியமான விஷயம் பற்றி விவாதிக்கும்போது, சாதியை ஒரு தீவிர விவாதத்துக்கு கொண்டுவந்தது ஏமாற்றத்தை அளிக்கிறது. தனி நபரின் பிறப்பிடம், அவரை விமர்சிக்க ஒரு வாதமாகப் பயன்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது. மகாத்மா காந்தி அல்லது சர்தார் வல்லபாய் படேலின் சாதி பற்றி யாராவது என்னிடம் கேட்டால் எனக்கு தெரியாது. அது என்னுடைய நியாபகத்தில்கூட இல்லை. அதே போல சி.எஃப் ஆண்ட்ரூஸ் அல்லது அன்னி பெசன்ட் ஆகியோரின் பிறந்த இடம் குறித்து கேட்டாலும் எனக்கு நியாபகம்கூட இல்லை. 21 ஆம் நூற்றாண்டில் இந்த குறுகிய அடையாளங்களை தாண்டி மக்கள் முன்னேற வேண்டும்” என்றார்.

இதனிடையே, 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கரின் கருத்துக்கும் பதிலளித்தார். அப்போது அவர், “நீங்கள் அரசியலமைப்புப் பதவியில் இருக்கிறீர்கள். அதற்கேற்றார் போல் நடக்க வேண்டுமே தவிர சாதி குறித்து புலம்பக் கூடாது. நாடாளுமன்றத்தில் நான் நிறைய முறை பேசவிடாமல் தடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக நான் தலித் என்பதால் தடுக்கப்பட்டேன் என்று கூற முடியுமா? பேச்சுரிமையை எங்களுக்குக் கொடுத்தது காந்தியும், நேருவும். எங்களின் பேச்சுரிமையை யாரும் பறிக்க முடியாது. நீங்கள் எதிர்ப்புகளை மீறி சட்டங்களை இயற்றலாம். எங்களைக் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யலாம். ஆனால், நாங்கள் ஒன்றுபட்டு உங்களை எதிர்ப்போம்” என்றார்.

இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, “சில இளைஞர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து புகை குப்பிகளை வீசியவுடன், தங்களை தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜக எம்.பி.க்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். நாங்கள் இதைக் கண்டோம். ஆனால், ஊடகங்களில் அது ஒளிபரப்பப்படவில்லை” என்றார். முழு விவரம் > “மக்களவை அத்துமீறலின்போது ஓடிய ‘தேசபக்த’ பாஜக எம்.பி.க்கள்” - ராகுல் காந்தி தாக்கு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE