“சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து எம்.பிக்கள் பலரும் தங்களை சஸ்பெண்ட் செய்ய கோரினர்” - மத்திய அமைச்சர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவை எம்.பிக்கள் சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து மேலும் பலர், தங்களையும் இடைநீக்கம் செய்யுமாறு கோரிக்கை வைத்ததாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. அவர்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால், அவர்கள் பதாகைகளை ஏந்தி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவ்வாறு சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து பல எம்.பிக்கள் தங்களையும் இடைநீக்கம் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். காங்கிரஸ் கட்சியின் நிலை இன்று இப்படித்தான் இருக்கிறது.

ஒழுங்கீனமாக நடந்து கொண்டவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மக்களவை மேலாளர்கள் எடுத்துச் சொன்னபோது, தாங்களும் ஒழுங்கீனமாகத்தான் நடந்து கொண்டதாகவும் எனவே தங்களையும் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்” என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மக்களவை உறுப்பினர்கள் 100 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 46 பேர் என மொத்தம் 146 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடந்து முடிந்த குளிர்கால கூட்டத் தொடர்தான் 17-வது மக்களவையின் கடைசி கூட்டத் தொடராக கருதப்படும் என கூறிய பிரகலாத் ஜோஷி, அடுத்து வரக் கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டபூர்வ அலுவல்கள் எதுவும் நடைபெறாது என்று தெரிவித்தார். 17-வது மக்களவையின் முதல் அமர்வு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருந்தது என்றும், அதில்தான் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதாகக் கூறினார். அதேபோல், 17-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரும் குற்றவியல் திருத்தச் சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வரலாறு படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நாட்டின் உயரிய பொறுப்பு வகிப்பவரை (குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்) மிமிக்ரி செய்து ஒரு எம்.பி கேலி செய்தபோது அதனை படம் பிடித்து ராகுல் காந்தி மகிழ்ந்ததாக விமர்சித்த பிரகலாத் ஜோஷி, 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட விரக்தி காரணமாக காங்கிரஸும், மற்ற எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்க முயன்றதாகக் குற்றம்சாட்டினார். ஆட்சியில் இருக்கும்போது காங்கிரஸ் பொறுப்பேற்காது என்றும், ஆட்சியில் இல்லாதபோது பொறுப்பற்று நடந்து கொள்ளும் என்றும் பிரகலாத் ஜோஷி விமர்சித்தார். இந்த சந்திப்பின்போது மற்றொரு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உடனிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE