புதிய குற்றவியல் சட்டம் | அலட்சியம் காரணமாக மரணம் விளைவித்தால் மருத்துவர்களுக்கு 2 ஆண்டு சிறை: அமித் ஷா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அலட்சியத்துடன் சிகிச்சை அளித்ததன் காரணமாக நோயாளி உயிரிழக்க நேரிட்டால் சிகிச்சை அளித்த மருத்துவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்கிறது புதிய குற்றவியல் சட்டம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து அமலில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா ஆகிய மூன்று திருத்தப்பட்ட சட்ட மசோதாக்கள் கடந்த புதன் கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் குறித்து விளக்கம் அளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரதிய நியாய (இரண்டாம்) சன்ஹிதா மசோதா, மருத்துவ அலட்சியத்தால் உயிரிழப்புகள் நேரும்போது அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குக் காரணமாக இருந்த மருத்துவருக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கவனக்குறைவான சிகிச்சை காரணமாக உயிரிழப்பு நேர்ந்தால் மருத்துவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் கோரிக்கை விடுத்திருப்பதாகத் தெரிவித்த அமித் ஷா, இதைக் கருத்தில் கொண்டு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் எனக் கூறினார். அதேநேரத்தில், இந்த மசோதா தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா, மருத்துவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இதில் உள்ள பிரிவு 106(1)-ன்படி, வேண்டுமென்றே நிகழ்த்தப்படும் கொலையைப் போல் அல்லாமல், கவனக்குறைவான செயல்பாடு காரணமாக உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருப்பவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். அதேபோல், பதிவு செய்யப்பட்ட மருத்துவர் அலட்சியமாக சிகிச்சை அளித்து அதன் காரணமாக உயிரிழப்பு நேருமானால் அவருக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். கவனக்குறைவான செயல்பாடுகளால் மரணத்தை விளைவிப்பவர்களுக்கு இந்திய குற்றவியல் சட்டம் 304ஏ, 1860-ன்படி அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறையும், அபராதமும் விதிக்கப்படும். புதிய சட்டத்தில், இது 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE