இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக பிரிஜ் பூஷனின் உதவியாளர் சஞ்சய் சிங் தேர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக, அந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், பாலியல் குற்றச்சாட்டுக்கும் உள்ளானவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய நிலையில், மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் போராட்டம், பல்வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங்களால் தேர்தல் நடத்துவது பல முறை தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து நிர்வாகிகளுக்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்த தவறிய காரணத்துக்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உலக மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்திருந்தது. இந்தப் பின்னணியில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் டிச.21 (வியாழக்கிழமை) நடந்தது. இன்று காலையில் டெல்லி வாக்குப்பதிவு நடந்தது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்தது.

இந்தத் தேர்தல் மூலம் கூட்டமைப்பின் தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர், துணைத் தலைவர் உட்பட 15 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு முன்னாள் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அனிதா ஷியோரன், உத்தரப் பிரதேச மல்யுத்த கூட்டமைப்பின் துணைத் தலைவர் சஞ்சய் இருவருக்கும் இடையில் நேரடிப் போட்டி நிலவியது.

ஹரியாணாவைச் சேர்ந்த அனிதா ஷியோரன், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு ஒடிசாவில் இருந்து போட்டியிட்டார். தேர்தலில் இவர் வெற்றி பெற்றிருக்கும் சமயத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முதல் பெண் தலைவராக அனிதா இருந்திருப்பார். இவருக்கு கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் கூறி, அவருக்கு எதிராக போராடிய சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் போன்ற நட்சத்திர வீரர்களின் ஆதரவு இருந்தது. மறுபுறம் பிரிஜ் பூஷனின் நெருங்கிய உதவியாளரான சஞ்சய் சிங், சமீப காலங்களில் ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கம் பெற்றுத்தந்த விளையாட்டான மல்யுத்தத்தின் பொற்காலத்தை மீண்டும் உருவாக்குவேன் என்று உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், இன்று நடந்த தேர்தலில் சஞ்சய் சிங் மொத்தமுள்ள 47 வாக்குகளில் 40 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தலைவர் பதவிக்கான தேர்தலுடன் மூத்த துணைத் தலைவர், நான்கு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், இரண்டு இணை செயலாளர்கள் மற்றும் 5 நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெற்றது. இதில் 4 துணைத் தலைவர் பதவிகளையும் பிரிஜ் பூஷண் அணியினரே வென்றுள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் (37), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசித் குமார் சாகா(42), பஞ்சாபைச் சேர்ந்த கர்தர் சிங் (44) மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த என் போனி (38) ஆகியோர் வெற்றி பெற்றனர். துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மத்தியப் பிரதேசத்தின் புதிய முதல்வரான மோகன் யாதவ் 5 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.

கூட்டமைப்பின் புதிய பொருளாளராக பிரிஜ் பூஷண் அணியினைச் சேர்ந்த உத்தரப் பிரதேசத்தின் சத்யபால் சிங் தேஷ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த துஷ்யந்த் சர்மாவை தோற்கடித்தார். அதேபோல், ஐந்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவியையும் பிரிஜ் பூஷண் அணியே கைப்பற்றியுள்ளது.

என்றாலும், நட்சத்திர வீராங்கனைகளின் ஆதரவு பெற்றிருந்த அனிதா ஷியோரன் அணிக்கு இது முற்றிலுமான தோல்வி என்று சொல்ல முடியாது. அந்த அணியினைச் சேர்ந்த ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் முன்னாள் செயலாளரான சந்த் லோசப், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தர்ஷன் லாலை 27 - 19 என்ற வாக்குகளில் வெற்றி பெற்று கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக தேர்வாகியுள்ளார்.

அதேபோல், தேசிய நெடுஞ்சாலைகளில் உணவு விடுதிகள் வைத்தியிருப்பவரும், போராட்டம் நடத்திய வீராங்கனைகளுக்கு ஆதரவாளராக கருதப்படும் தேவேந்தர் சிங் காடியன் தன்னை எதிர்த்து நின்ற டி. நானாவதியை 32-15 என்ற வாக்குகளில் தோற்கடித்து மூத்த துணைத் தலைவர் பதவியை வென்றார்.

முன்னதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கும், சில பயிற்சியாளர்களும் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டி மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனவரி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் வீரர் வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுடன், எதிர்காலத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்னை சுதந்திரமான அமைப்பாக உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் நடந்தது. அப்போது பிரிஜ் பூஷனோ அவரது உறவினர்களோ கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கோரிக்கை வைத்தனர். வீரர் வீராங்கனைகளின் போராட்டம் ஜூன் மாதம் வரை தொடர்ந்தது. அதன் பின்னர் விளையாட்டுத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தப் பின்னர் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்