தெலங்கானா கடன் சுமை ரூ.6.71 லட்சம் கோடி: மாநில அரசு வெள்ளை அறிக்கை

By என்.மகேஷ்குமார்


ஹைதராபாத்: தெலங்கானாவில் சமீபத்திய தேர்தலுக்குப் பிறகு ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தெலங்கானா சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

இதில் மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசும்போது, “கடந்த 2014-ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவான போது நிதி நிலைமை மிக நன்றாக இருந்தது. போதிய நிதியுடன் மாநிலம் பிரிக்கப்பட்டது. ஆனால், தற்போது தெலங்கானா மாநிலத்தின் கடன் சுமை ரூ. 6,71,757 கோடியாக உள்ளது. சந்திரசேகர ராவின் முந்தைய ஆட்சியில் மாநிலமே கடனில் மூழ்கிவிட்டது” என்றார்.

இதையடுத்து துணை முதல்வரான பட்டி விக்ரமார்க்கா, மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்து 42 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டு கூறும்போது, “கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த நிதி துஷ்பிரயோகம் குறித்து மக்களுக்கு தெரிய வேண்டும். அதற்காகவே வெள்ளை அறிக்கையை நாங்கள் வெளியிடுகிறோம்” என்றார்.

தெலங்கானா மாநிலத்தின் கடன் சுமை ரூ.6,71,757 கோடி. 2014-15-ம் ஆண்டில் மாநில கடன் ரூ.72,658 கோடியாக இருந்தது. கடந்த பட்ஜெட்டுக்கும், உண்மையான நிதி நிலைக்கும் 20சதவீதம் வித்தியாசம் உள்ளது. மாநில வருவாயில் 34 சதவீதம்கடனை அடைக்க பயன்படுத்தப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க 35 சதவீதம் செலவிடப்படுகிறது என்று வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE