மிமிக்ரி விவகாரம்: நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் சமூக ஆர்வலர் புகார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜக்தீப் தன்கரைப் போல் மிமிக்ரி செய்த கல்யாண் பானர்ஜி, அதனை படம் பிடித்த ராகுல் காந்தி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் சமூக ஆர்வலர் வினீத் ஜிண்டால் புகார் அளித்துள்ளார்.

அவர் தனது புகார் மனுவில், ''குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் அவையை நடத்திக் கொண்டிருக்கும்போது, அவைக்கு வெளியே கூடிய எம்.பிக்கள் அவரை அவமதித்திருக்கிறார்கள். குடியரசு துணைத் தலைவரை திரிணாமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி மிமிக்ரி செய்ய, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அதனை படம் பிடிக்க மற்றவர்கள் கிண்டலாக சிரித்து கேலி செய்திருக்கிறார்கள். இது வெட்கக்கேடானது. அவையின் கண்ணியத்துக்கும் அவை உறுப்பினர்களின் கண்ணியத்துக்கும் எதிரான குற்ற நடவடிக்கை இது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்க்கு முராணானது.

இந்த தவறான நடத்தை நாடாளுமன்ற நெறிமுறை விதிகளுக்கு எதிரானது. நாட்டின் மிக உயரிய பதவியை வகித்து வருபவருக்கு எதிராக இவ்வாறு நடந்து கொண்டதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும். நெறிமுறைக் கொள்கைகளுக்கு முரணாக அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற நெறிமுறைகளை மீறி இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அவர்கள் தவறாக நடந்து கொள்வது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே தவறாக நடந்து கொண்டதால்தான் அவர்களில் பலர் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். எனவே, குடியரசுத் துணைத் தலைவரை, மாநிலங்களவைத் தலைவரை வேண்டுமென்றே அவமதித்த குற்றத்துக்காக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த ஒழுங்கு நடவடிக்கை குழு சம்பந்தப்பட்ட எம்.பிக்களை வெளியேற்ற வேண்டும்'' என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE