“என்னை அவமதித்தால் சகித்துக்கொள்வேன்; எனது பதவியை அவமதித்தால்...” - ஜக்தீப் தன்கர் ஆவேசம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ''என்னை அவமதித்தால் சகித்துக்கொள்வேன்; எனது பதவியை அவமதித்தால் பொறுத்துக்கொள்ள முடியாது'' என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர், ''மிமிக்ரி செய்து எம்.பி. ஒருவர் என்னை அவமதிக்கிறார். அதை இன்னொரு எம்.பி. மொபைலில் படம் பிடிக்கிறார். ஜக்தீப் தன்கர் அவமதிக்கப்படுவதைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது. ஆனால், நாட்டின் குடியரசு துணைத் தலைவரை, விவசாய சமூகத்தை, எனது சமூகத்தை அவமதிப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது. எனது பதவி அவமதிக்கப்படுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த அவையின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது'' என தெரிவித்தார்.

ஜக்தீப் தன்கரின் இந்தப் பேச்சுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் பதிலளித்த மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ''மிமிக்ரி என்பது ஒரு கலை. ஜக்தீப் தன்கரை மிமிக்ரி செய்ததாக யாரும் சொல்லவில்லை. தன்னை மிமிக்ரி செய்ததன் மூலம் தனது சாதியை அவமதித்ததாக ஜக்தீப் தன்கர் கூறுகிறார். குடியரசுத் துணைத் தலைவராக உள்ள ஒருவர் இப்படி பேசுவது பொருத்தமானதா?'' என கேள்வி எழுப்பினார்.

இதேபோல், ஜக்தீப் தன்கரின் இந்தப் பேச்சுக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, ''நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை என்பதற்காக எனது சாதிகூட தாக்கப்பட்டது. எனது சாதியையும்தான் தாக்கிப் பேசினார்கள்'' என கூறினார். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி குடியரசு துணைத் தலைவரை கிண்டல் செய்யும் வகையில் மிமிக்ரி செய்தது குறித்துப் பேசிய அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, இதை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், பெரிதுபடுத்தக் கூடாது என்றும் கூறினார்.

இதனிடையே, ஆளும் கூட்டணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநிலங்களவையில் எழுந்து நின்று ஜக்தீப் தன்கருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். எதிர்க்கட்சி எம்.பிக்களின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அவையில் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ''குடியரசுத் தலைவருக்கு அடுத்த நாட்டின் மிக உயரிய பதவி குடியரசு துணைத் தலைவர் பதவி. ஆனால், அந்த பதவியை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் செயல்பட்டுள்ளன. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இந்த சம்பவத்துக்கு சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ, மல்லிகார்ஜுன் கார்கேவோ கண்டனம் தெரிவிக்கவில்லை. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறுகிறார். குடியரசு துணைத் தலைவர் அவமானப்படுத்தப்பட்டதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?'' என கேள்வி எழுப்பினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE