“ஜனநாயகத்தின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது” - 141 எம்.பி.,க்கள் இடைநீக்கம் குறித்து சோனியா காந்தி விமர்சனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 141 எம்.பி.கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி, ‘ஜனநாயகத்தின் கழுத்து நெரிக்கப்பட்டு விட்டது’ என்று சாடியுள்ளார்.

காங்கிரஸ் நாடாளுன்ற உறுப்பிர்கள் கூட்டத்தில், எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, “இந்த அரசினால் (மோடி அரசு) ஜனநாயகத்தின் கழுத்து நெரிக்கப்பட்டுவிட்டது. இதற்கு முன்பு நியாயமாக கோரிக்கை எழுப்பியதற்காக இவ்வளவு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மொத்தமாக இடைநீக்கம் செய்யப்பட்டது இல்லை. டிச.13 ஆம் தேதி நடந்தது அசாதாரணமான நிகழ்வு. இரண்டு நபர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்து வண்ணப் புகை குப்பிகளை வீசியது மிகப்பெரிய பாதுகாப்பு அத்துமீறல். அச்சம்பவத்துக்கு பதிலளிக்கப்பட்ட ஆணவப்போக்கினை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

கடந்த 13 ஆம் தேதி நடந்ததை மன்னிக்கவும், நியாயப்படுத்தவும் முடியாது. இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கவும், நாட்டுப்மக்களுக்கு விளக்கம் அளிக்கவும் பிரதமர் மோடிக்கு நான்கு நாட்களாகியிருக்கிறது. அதுவும் நாடாளுமன்றத்துக்கு வெளியே சம்பவம் குறித்து பேசியிருக்கிறார். இதன்மூலம் அவர் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தினையும் நாட்டு மக்களையும் அலட்சியம் செய்வது தெளிவாகத் தெரிகிறது. இந்தநேரத்தில் பாஜக எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் எவ்வாறு எதிர்வினையாற்றியிருக்கும் என்பதை நான் உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் டிச.13-ம் தேதி நடந்த அத்துமீறல் சம்பவம் குறித்து நான்கு நாட்களுக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடி இந்தி மொழியில் வெளியாகும் தினசரிக்கு அளித்த பேட்டியில், “நாடாளுமன்ற அத்துமீறல் தீவிரமான பிரச்சினை. இது மனவேதனையும் கவலையும் அளிப்பதாக உள்ளது. இதை குறைத்து மதிப்பிடவோ புறந்தள்ளவோ முடியாது. இந்த சம்பவத்துக்கு பின்னால் இருப்பவர்கள் யார், அவர்களுடைய நோக்கம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். அதேநேரம் இந்த விவகாரத்தை சர்ச்சையாக்கக் கூடாது. நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்த விவகாரத்தை மக்களவைத் தலைவரும் தீவிரமாக எடுத்துக் கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதேநேரம் விசாரணை அமைப்புகளும் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன” என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் நடந்தது தொடர்பாக, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் அறிக்கைகள் மற்றும் விவாதத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததற்காக மொத்தம் 141 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே கூட்டத்தொடரில் 141 எம்.பி.க்கள் 2 அவைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE