நாடாளுமன்ற அத்துமீறலை எதிர்க்கட்சிகள் ஆதரிப்பது கவலை அளிக்கிறது: பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறலை எதிர்க்கட்சிகள் ஆதரிப்பது கவலை அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில் 2 பேர் வண்ண புகை குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதேநேரம் நாடாளுமன்றத்துக்கு வெளியே 2 பேர் வண்ண குப்பிகளை வீசி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் செயல்பாடு முடங்கியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, "வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் காரணமாகவே நாடாளுமன்றத்தில் வண்ண குப்பி தாக்குதல் நடத்தப்பட்டது" என்று தெரிவித்தார்.

இந்த சூழலில் பாஜக எம்பிக்களின் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் கூறியதாவது: நாடாளுமன்ற அத்துமீறலை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த அத்துமீறலை வன்மையாக கண்டிக்கிறோம். துரதிருஷ்டவசமாக நாடாளுமன்ற அத்துமீறலை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கின்றன. மக்களவையில் அத்துமீறலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள் குரல் எழுப்புகின்றனர். இது மிகுந்த கவலை அளிக்கிறது.

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் (காங்கிரஸ்) தோல்வியை தழுவி உள்ளன. இந்த விரக்தியின் காரணமாக அந்த கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. இந்த நேரத்தில் பாஜக எம்பிக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். பாஜக எம்பிக்கள் அவையில் அமைதி காத்து, ஜனநாயக மரபுகளை மதித்து நடக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டை மக்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார்கள். அவர்களின் நடவடிக்கை காரணமாக வரும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி எம்பிக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும்.

நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் வந்தாலும், வராவிட்டாலும் கவலையில்லை. நாங்கள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தொடர்ந்து பங்கேற்போம். சில முக்கியமான மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அந்த மசோதாக்களை நிறைவேற்ற வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE