எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்: இண்டியா கூட்டணி டிச.22-ல் நாடு தழுவிய போராட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 22-ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக இண்டியா கூட்டணி அறிவித்துள்ளது.

இண்டியா கூட்டணியின் 4-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, சிவ சேனா (உத்தவ் பிரிவு), மதிமுக உள்ளிட்ட 28 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ''இண்டியா கூட்டணி சார்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் 28 பேர் பங்கேற்றார்கள். இண்டியா கூட்டணி எவ்வாறு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பது குறித்து ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி எம்.பிக்கள் 141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கத்தைக் கண்டித்து வருகிற 22-ம் தேதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். நாட்டை ஆள்வதற்கு தங்களைவிட சிறந்தவர்கள் வேறு யாரும் இல்லை என்று பிரதமரும் உள்துறை அமைச்சரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை நாங்கள் சவாலாக எடுத்துக்கொள்கிறோம்.

இண்டியா கட்சிகளின் தொகுதிப் பங்கீடு மாநில அளவில் நடைபெறும். அதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அது தேசிய அளவில் முடிவு செய்யப்படும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதே முதல் இலக்கு. வெற்றி பெற்ற பிறகு பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படும். இதில் தாமதம் இருக்காது.

இண்டியா கூட்டணியை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் கூட்டணி கட்சிகளிடையே ஒருமித்த கருத்து உள்ளது. இது மகிழ்ச்சியை அளித்துள்ளது. நாடு முழுவதும் 8-10 பொதுக்கூட்டங்களை நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். கூட்டணி தலைவர்கள் ஒன்றாக மேடையில் தோன்றாவிட்டால் மக்களுக்கு அதுபற்றி தெரியாது. எனவே, கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து பொதுக்கூட்டங்களை நடத்துவோம். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் 141 எம்பிக்களை இடைநீக்கம் செய்ததைக் கண்டித்து நடைபெற உள்ள நாடு தழுவிய போராட்டம்'' என தெரிவித்தார்.

கூட்டத்தை விட்டு வெளியே வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ''இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும் முன்மொழிந்தனர். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை'' என கூறினார். பிரதமர் வேட்பாளராக தான் முன்மொழியப்பட்டதை அடுத்துப் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, இது குறித்து இப்போது பேச வேண்டாம் என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்