“கேரளாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட மார்க்சிஸ்ட் முயல்கிறதா?” - காங். எம்.பி முரளிதரன் சந்தேகம்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: தீவிரமான ஆளுநர் எதிர்ப்பை கையில் எடுப்பதன் மூலம், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிடுகிறதோ என்ற சந்தேகம் உள்ளதாக கேரள காங்கிரஸ் எம்.பி கே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், ''கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கானுக்கு எதிராக தீவிர நிலைப்பாட்டை ஆளும் சிபிஎம் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே அது தனது மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ மூலம் ஆளுநருக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.எஃப்.ஐ அமைப்பினர், ஆளுநரின் காரை தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் ஆளுநர்களின் செயல்பாடு அரசுக்கு எதிராகத்தான் உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும், தற்போது ஆட்சியில் உள்ள கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றிலும் ஆளுநர்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். ஆனால், சிபிஎம் போல் நாங்கள் ஆளுநர்களிடம் நடந்து கொண்டது கிடையாது. தமிழகத்தில் கூட ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்கும் இணக்கமான போக்கு கிடையாது. ஆனாலும், ஆளுநர் சுற்றுப் பயணம் மேற்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், கேரளாவில் ஆளுநர் சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடியாத நிலையை சிபிஎம் ஏற்படுத்தி உள்ளது.

ஆளுநர் வெளியே செல்வதைத் தடுப்பது என்பது விபரீத சட்ட விளைவுகளை ஏற்படுத்தும். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள சிபிஎம் செயலாளர் எம்.வி.கோவிந்தன், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட ஆளுநர் திட்டமிடுகிறார் என கூறி இருந்தார். உண்மையில் எனக்கு ஆளும் கட்சி மீதுதான் சந்தேகம் இருக்கிறது. ஆளுநரின் பயணத்தை தடுப்பதன் மூலம் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைய சிபிஎம் கட்சியே திட்டமிடுகின்றதோ என நான் சந்தேகிக்கிறேன்; அச்சம் கொள்கிறேன்.

ஏனெனில், கேரளா பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. அதனால் எழுந்துள்ள அதிருப்தியில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள அவர்கள் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு அழைப்பு விடுக்கிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது. சிபிஎம் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு உண்டு என்றாலும், கேரளாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர மத்திய அரசு முயலுமானால் நாங்கள் அதனை எதிர்ப்போம்.

கேரளாவில் உயர் கல்வியை காவிமயமாக்க ஆளுநர் முயல்கிறார். பாஜக ஆதரவாளர்களை பல்கலைக்கழக செனட் உறுப்பினர்களாக ஆக்குவதற்கு ஆதரவாக அவர் செயல்படுகிறார். அதேநேரத்தில், உயர் கல்வி அமைப்பை மார்க்ஸிஸ்ட் மயமாக்க ஆளும் கட்சி முயல்கிறது. பல்கலைக்கழகங்களில் கட்சிக்காரர்களை மட்டுமே செனட் உறுப்பினர்களாக நியமிக்க சிபிஎம் விரும்புகிறது. இரண்டையும் நாங்கள் எதிர்க்கிறோம். பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளின்படி பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE