ஆம் ஆத்மி அரசு சட்டத்தை மீறியது எப்படி?

By எம்.சண்முகம்

டெல்லியில் இரட்டைப் பதவி மூலம் ஆதாயம் அடைந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் டெல்லியில் 20 ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் ஒரே நேரத்தில் பதவியிழந்தது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவே முதல்முறை.

கடந்த 2015-ம் ஆண்டு நடந்த டெல்லி தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. பதவியேற்று ஒரு மாதத்தில் அக்கட்சியைச் சேர்ந்த 21 எம்எல்ஏ-க்கள் நாடாளுமன்ற செயலர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த பதவி அமைச்சர் பதவிக்கு இணையானது. எனவே, இவர்கள் 21 பேரும் இரட்டைப் பதவி வகிப்பவர்களுக்கு சமம் என்று கூறி, வழக்கறிஞர் பிரசாந்த் படேல் குடியரசுத் தலைவருக்கு புகார் அளித்தார். இதில் ரஜோரி கார்டன் எம்எல்ஏ ஜர்னைல் சிங் ராஜினாமா செய்ததையடுத்து, இந்த எண்ணிக்கை 20 ஆக குறைந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 102(ஏ) மற்றும் பிரிவு 191(1)(ஏ) ஆகியவை இரட்டைப் பதவிகள் குறித்து தெரிவிக்கின்றன. மக்கள் பிரதிநிதி ஒருவர் இரட்டைப் பதவி வகித்து 2 ஆதாயம் பெற்றால் அவர்கள் பதவியிழப்பர் என்பதுதான் இப்பிரிவுகளின் சாராம்சம். இதில் ‘ஆபீஸ் ஆப் ப்ராபிட்’ (ஆதாயம் பெறும் பதவி) என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. எந்தெந்த பதவிகள் இந்த பிரிவின் கீழ் வரும் என்ற பட்டியலும் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பின்னர் 1959-ம் ஆண்டு திருத்தப்பட்டதில் தனிப்பட்டியல் உருவாக்கப்பட்டு, அந்த பட்டியலில் வரும் பதவிகள் இரட்டைப் பதவி என்ற வகைப்பாட்டில் வராது என்று விலக்களிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ-க்களுக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற செயலர் பதவி விலக்களிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனால், தேவைபட்டால் சட்டத் திருத்தம் கொண்டு வந்து எந்த பதவிக்கும் விலக்கு அளிக்க முடியும் என்ற பிரிவு உள்ளது. இதன் அடிப்படையில் டெல்லி சட்டசபையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு பின்தேதியிட்டு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த சட்ட திருத்தத்திற்கு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்கவில்லை. இதுகுறித்து முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு குடியரசுத் தலைவர் அனுப்பி வைத்தார். தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை நிராகரித்த டெல்லி உயர் நீதிமன்றம் நாடாளுமன்ற செயலர் நியமனத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவையே காரணம் காட்டி, தேர்தல் ஆணைய விசாரணைக்கு எம்எல்ஏ-க்கள் தடை கோரினர். அதை நிராகரித்து, இறுதியில் தேர்தல் ஆணைய பரிந்துரையின் பேரில் 20 பேரின் பதவியைப் பறித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். ராஜினாமா செய்தவர்கள் மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் போக ஆம் ஆத்மி கட்சியில் மீதமிருக்கும் எம்எல்ஏ-க்கள் 63 பேர். இதில் 20 பேர் பதவியிழந்தையடுத்து அக்கட்சி எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 42 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மைக்கு 36 பேர் போதும் என்பதால் ஆட்சி கவிழாது.

சோனியா முதல் ஜெயா பச்சன் வரை

கடந்த 2006-ம் ஆண்டு எம்.பி.யாக இருந்த ஜெயா பச்சன், உத்தரபிரதேச திரைத்துறை மேம்பாட்டுக் குழு தலைவராக இருந்தார். புகார் எழுந்ததால் அவர் பதவி பறிக்கப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் கோல்கட்டா இந்திய புள்ளியியல் துறை தலைவர் ஆகிய இரட்டைப் பதவிகளை வகித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. நீதிமன்றம் இந்த குற்றச்சாட்டை நிராகரித்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் திட்டக் குழு பொறுப்பு வகித்தபோதும் இந்த சர்ச்சை எழுந்தது. சோனியா காந்தி இதே குற்றச்சாட்டில் தேசிய ஆலோசனைக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இரட்டைப் பதவி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், இதற்கு முன்பு பல வழக்குகள் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறியுள்ளன. அதில் மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை நினைத்தால் எந்தப் பதவியையும் விலக்கு அளிக்கப்பட்ட பட்டியலில் கொண்டு வர முடியும் என்பது நீதிமன்ற தீர்ப்புகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பதே ஒரு தரப்பினரின் கருத்தாக உள்ளது. ஆனால், பின் தேதியிட்டு கொண்டு வரப்படும் சட்டத்தை ஏற்க முடியாது என்று எதிர்தரப்பினர் வாதிடுகின்றனர்.

தமிழகத்தில்..

தமிழகத்தில், 2001-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயராக மு.க.ஸ்டாலின் 2-வது முறை தேர்வானபோது, அவர் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ-வாகவும் இருந்தார். அவர் மீது இரட்டைப்பதவி குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, மேயர் பதவியை இழக்க நேர்ந்தது. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு பதவியில் ஒருவரை நியமிக்கும்போது, இந்தப் பதவி இரட்டைப்பதவி ஆதாயத்தின் கீழ் வருமா, இல்லையா என்பது உத்தரவிலேயே குறிப்பிடப்படும். இதனால், சர்ச்சைகள் உருவாகாமல் தவிர்க்கப்படுகிறது. இதுபோல இந்தியாவிலும் இரட்டைப்பதவி விவகாரத்தில் தெளிவான அரசியல் நிலையை மேற்கொண்டால் மட்டுமே இந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்